உத்தரப்பிரதேச மசூதியை போல ஶ்ரீரங்கம், திருப்பதி கோவில் பூர்வீகம் குறித்து ஆய்வு செய்யலாமா?: வன்னி அரசு!
உ.பி. சம்பல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஷாஹி ஜமா மசூதி இடத்தில் இந்து கோவில் இருந்ததாக சம்பல் மாவட்ட நீதிமன்றத்தில் இந்து கோவில் பூசாரி ஒருவர் தாக்கல் செய்த மனுவில், மசூதியை ஆய்வு செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த வாரம் ஆய்வும் நடத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று(நேற்று) மீண்டும் ஆய்வு செய்வதற்கு இந்து தரப்பு சென்ற போது, அதற்கு இசுலாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 இசுலாமிய இளைஞர்கள் கொல்லப்பட்டனர். போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் மசூதியில் ஆய்வு முடிக்கப்பட்டது.
சனாதன பயங்கரவாத கும்பலால் பாபர் மசூதி 1992ஆம் இடிக்கப்பட்டது. அதற்குண்டான வெறுப்பு பரப்புரையில் அத்வானி நாடெங்கும் கலவர பேரணியை 1990ஆம் ஆண்டு நடத்திய நிலையில், அயோத்தி பாப்ரி மசூதி விவகாரத்தை தவிர்த்து 1991ஆம் ஆண்டு ‘வழிபாட்டு இடங்கள் சட்டத்தை’ பாராளுமன்றத்தில் நிறைவேற்றினார் பிரதமர் நரசிம்ம ராவ். வழிபாட்டு இடங்கள் சட்டத்தின் முக்கிய பிரிவுகளான 4 & 5 சொல்வது.. 4.(1) 1947 ஆகஸ்ட் 15ஆம் நாளன்று நிலவி வந்த ஒரு வழிபாட்டு இடத்தின் சமயத் தன்மையானது, அந்த நாளில் நிலவி இருந்தவாறு அதேபோன்று தொடர்ந்திருக்கும் 5. இந்தச் சட்டத்தில் அடங்கியுள்ள எதுவும், உத்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள அயோத்தியில் அமைந்திருக்கிற இராம ஜென்ம பூமி பாபர் மசூதி எனப் பொதுவாக அறியப்பட்ட அந்த இடத்திற்கு அல்லது வழிபாட்டு இடத்திற்கு மற்றும் அந்த மேற்கொள்ள அல்லது இடம் தொடர்பான உரிமைவழக்கு, மேன்முறையீடு அல்லது பிற நடவடிக்கை எவற்றிற்கும் பொருந்துறாது//
பாபர் மசூதி வழக்குக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டு சட்டம் கொண்டு வரப்பட்டது. 2019ல் பாபர் மசூதி நிலத்தை சனாதன பயங்கரவாத கும்பலுக்கு வழங்கி கட்டப்பஞ்சாயத்து செய்தது உச்சநீதிமன்றம். சமீபத்தில் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அதற்கு சில நாட்களுக்கு முன்னர், மராட்டிய மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரில் ஒரு நிகழ்ச்சியில் பேசினார். பாபர் மசூதி வழக்கில் முடிவு எடுப்பதற்கு 3 மாதங்களாக மிகவும் சிரமப்பட்டதாகவும், அப்போது கடவுளின் சிலை முன்பு அமர்ந்து, அவ்வழக்கிற்கு அவரே தீர்வை சொல்லும்படி வேண்டினேன் என்றும் தெரிவித்துள்ளார். அத்தகைய தீர்ப்பில் கூட, வழிபாட்டு இடங்கள் சட்டம் குறித்து மிகவும் விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது. வரலாற்றின் தவறுகளை சரி செய்யும் கருவியாக சட்டத்தை பயன்படுத்த கூடாது. வழிபாட்டு இடங்கள் சட்டமானது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கூறுகளில் ஒன்றான மதச்சார்பின்மையை பாதுகாக்கும் நோக்கத்திலும், அதற்கு வலுசேர்க்கும் விதமாகவும் பாராளுமன்றத்தால் கொண்டு வரப்பட்டுள்ளது என்பதாக கருத்து தெரிவிக்கப்பட்டு அச்சட்டத்தின் முக்கியத்துவத்தை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.
இருப்பினும் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அடுத்துள்ள ஞானவாபி மசூதி பகுதியில் கோவில் இருந்தது. அந்த இடத்தின் மதத்தன்மையை கோவில் என்று அறிவிக்க கோரி வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மசூதிக்குள் ஆய்வு நடத்தவும், குறிப்பிட்ட பகுதியில் இந்துக்கள் வழிபாடு நடத்தவும் நீதிமன்றம் அனுமதித்தது. இதனை எதிர்த்த மசூதி தரப்பு வழக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. வழிபாட்டு இடங்கள் சட்டம் இங்கு பொருந்தாது என்று சொன்னது. உச்சநீதிமன்ற மேல்முறையீட்டில் தான் தலைமை நீதிபதி சந்திரசூட் அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பில் தலையிட மறுத்துவிட்டார். ஒரு குறிப்பிட்ட வழிபாட்டு தலத்தின் மதத்தன்மையை உறுதி செய்தவற்காக தான் மனுதாரர் கேட்டுள்ளார். இது வழிபாட்டு இடங்கள் சட்டத்துக்கு எதிராக இல்லை. மதத்தன்மை தீர்மானிக்கப்படுவது, அந்த இடத்தின் மதத்தன்மையை மாற்றுவது ஆகாது என்று தெரிவித்தார்.
வாரணாசி ஞானவாபி மசூதி போல, மதுராவின் ஷாஹி இத்கா மசூதி கிருஷ்ணர் பிறந்த இடம் என்று வழக்கு உள்ளது. அயோத்தியை தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் கும்பலின் அடுத்து குறி காசியும் மதுராவும் தான். இஸ்லாமிய வழிபாட்டு இடங்களை எதிர்த்து வழக்கு தொடுக்கும் சனாதன கும்பல் முன்வைக்கும் வாதம், வழிபாட்டு இடத்திலிருந்து கடவுளர்களின் சிலைகள் அப்புறப்படுத்தப்பட்டாலும், அந்த இடம் கோவிலாகவே தொடர்கிறது. அந்த இடத்தின் மதத்தன்மை மாறுவதில்லை என்பது தான். சமண – பெளத்த வழிபாட்டு தலங்களை வன்முறையின் மூலம் தனதாக்கி கொண்டது சனாதனம். பெளத்தத்துக்கும் பார்ப்பனியத்துக்கும் இடையேயான போராட்டமே இந்திய வரலாறு என்றார் புரட்சியாளர் அம்பேத்கர். சனாதன கும்பலின் வாதப்படி, திருவரங்கம் – திருப்பதியின் மதத்தன்மையை ஆராயும்படி நாம் கோரினால் ஏற்குமா நீதிமன்றம்? இவ்வாறு வன்னி அரசு கேள்வி எழுப்பியுள்ளார்.