அமைச்சரவை மாற்றம் உதயநிதிக்கு ஏற்றமாகவும் துரைமுருகனுக்கு ஏமாற்றமாகவும் இருக்கும் : தமிழிசை..!
முதல்வர் மு.க. ஸ்டாலினின் மகனும் தற்போதைய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்குவது குறித்து திமுக ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று திமுக அமைச்சர்கள் கூறி வருகின்றனர். இன்று காலை கொளத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று கூறினார்.
இந்நிலையில், முன்னாள் ஆளுநரும் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் இன்று செய்தியாளர்களுடன் பேசினார். அப்போது உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ‘அமைச்சரவை மாற்றம் உதயநிதிக்கு ஏற்றமாகவும் துரைமுருகனுக்கு ஏமாற்றமாகவும் இருக்கும். யார் ஏற்றம் பெறப் போகிறார்கள், யார் ஏமாறப் போகிறார்கள் என்று தெரியவில்லை. கண்டிப்பாக எல்லோருக்கும் ஏற்றமாக இருக்காது. பலருக்கும் ஏமாற்றத்தைத் தரப் போகிறது. உதயநிதிக்கு முடிசூட்டுவதற்கு அடித்தளம் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். வாரிசு அரசியல் முறையில் இவர்கள் போன்றவர்கள் பதவிக்கு வந்தால் அரசாங்கத்துக்கும் நல்லதல்ல, ஆட்சிக்கும் நல்லதல்ல, ஜனநாயகத்திற்கும் நல்லதல்ல’ என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், ‘திமுக ஆட்சியில் என்கவுன்டர்கள் அதிகம் நடக்கிறது. திமுக பொறுப்பேற்ற பின்னர் 17 என்கவுன்டர்கள் நடந்துள்ளன. யாரையோ காப்பாற்றுவதற்காக இதெல்லாம் நடைபெறுகிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கஞ்சா பயன்பாடு, பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது. சட்டம் – ஒழுங்கு தமிழகத்தில் சரியாக இல்லை. சமூக நீதியைப் பற்றி பேசுகிறார்கள். துணை முதல்வர் பதவியை திருமாவளவன் போன்றோருக்கு வழங்கக் கூடாது என மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே நான் கேட்டிருக்கிறேன்’ என்றார்.