திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து! அலறிய பயணிகள்...திருவாரூர் அருகே 10-க்கும் மேற்பட்டோர் காயம்!
திருவாரூரிலிருந்து திருக்கொள்ளிக்காடு என்ற பகுதியில் பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வாரந்தோறும் சனிக்கிழமையில் அதிக அளவு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
அதன்படி, நேற்று (மே 23) இந்த கோயிலுக்கு அரசு பேருந்து ஒன்று 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. திருவாரூர் அருகே திருநெய்ப்பேர் என்ற பகுதியில் சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள வாய்க்காலில் பேருந்து வேகமாக பாய்ந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்து ஏற்பட்ட உடனே பேருந்தில் இருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர். அவர்களின் சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மீட்பு பணியில் ஈடுபட்டனர். பேருந்தின் உள்ளே சிக்கியிருந்த பயணிகளை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் பெண்கள் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

