#BREAKING வரலாறு காணாத புதிய உச்சம்.. ரூ.58,000ஐ நெருங்கியது தங்கம் விலை..!
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,000ஐ நெருங்கியது.
உள்நாட்டில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதால் தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்றம் கண்டு வருகிறது. அவ்வப்போது தங்கத்தின் விலை குறைவது போல போக்கு காட்டி வந்தாலும், கணிசமாக விலை ஏற்றம் கண்டிருப்பதை காண முடிகிறது. கடந்த மாதம் இறுதியில் இருந்து அதிரடியாக ஏற்றம் கண்டு வரும் தங்கம் விலை, கடந்த 4ம் தேதி ஒரு சவரன் ரூ. 56,960க்கு விற்பனை செய்யப்பட்டதே புதிய உச்சமாக இருந்து வந்தது. அன்றைய தினம் வெள்ளி விலையும் புதிய உச்சமாக கிராம் ரூ.103க்கு விற்கப்பட்டது.
அதன்பிறகு விலை குறைவதும், உயர்வதுமாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரே அடியாக சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து ரூ. 57,000ஐ தாண்டி மீண்டும் புதிய உச்சத்தை எட்டியது. தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்றும் தங்கம் விலை மேலும் ரூ.160 உயர்ந்து ஒரு கிராம் ரூபாய் ரூ.7,160க்கும் , ஆபரணத்தங்கம் ஒரு சவரன் ரூ.57,280க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேநேரம் வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் 103 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்நிலையில் இன்று இதுவரை இல்லாத அளவாக அதிரடி ஏற்றம் கண்டுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒருசவரன் ரூ. 57,920க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலையும் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது. சென்னையில் சில்லறை விற்பனையில் வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.105க்கு விற்பனையாகிறது.