பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்- மாணவர்கள் அவசர அவசரமாக வெளியேற்றம்! ஈரோட்டில் பரபரப்பு
ஈரோட்டில் தனியார் பள்ளிக்கு இமெயில் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு அவசரம் அவசரமாக மாணவர்களும் ஆசிரியர்களும் வெளியே அனுப்பப்பட்டனர். பள்ளி வளாகத்தில் போலீசார் மூலம் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
ஈரோடு செட்டிபாளையம் பகுதியில், ஜூனியர் சேம்பர் மற்றும் jaycees சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் ஜேசீஸ் பள்ளி இயங்கி வருகிறது. 1976 முதல் செயல்பட்டு வரும் பழமைவாய்ந்த இந்த பள்ளியில் சுமார் 2000 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர் வழக்கம் போல் இன்று காலை பள்ளி பிரேயர் முடிந்து வகுப்புகள் தொடங்கிய நிலையில், பள்ளியின் இ.மெயில் முகவரிக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்திருப்பதை நிர்வாகிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது வெடிக்க இருப்பதாகவும் அதில் மர்ம நபர் மிரட்டல் விடுத்திருந்தார்.
இது குறித்து பள்ளி நிர்வாகத்தினர் அளித்த புகாரின் பேரில் பள்ளிக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் அறிவுறுத்தலின் பேரில் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு மாணவ மாணவிகள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதால், பதறியடித்து வந்த பெற்றோர் தங்களது பிள்ளைகளை வீடுகளுக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த செப்டம்பர் 2.ம் தேதி இதே பள்ளிக்கு இ.மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்த்தால் போலீசார் சோதனையில் அது புரளி என்பது தெரியவந்தது. மேலும் விடுமுறைக்காக அதே பள்ளியில் பயிலும் 9 ம் வகுப்பு மாணவர்கள் இமெயில் அனுப்பியதும் அப்போதைய விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு மாணவர்கள் எச்சரிக்கப்பட்டனர். இந்நிலையில் இரண்டு மாத இடைவெளிக்கு பின் மீண்டும் அந்த பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.