திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றக் கூடாது என்பதுதான் பிரியங்காவின் நிலைப்பாடா?- வானதி சீனிவாசன்

 
வானதி சீனிவாசன் வானதி சீனிவாசன்

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றக் கூடாது என்பதுதான் பிரியங்கா, அகிலேஷ் யாதவின் நிலைப்பாடா? இந்து விரோதிகள் என்பதை பிரியங்கா, அகிலேஷ் யாதவும் நிரூபித்து விட்டனர் என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

வானதி

இதுதொடர்பாக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்க் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருபரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான கந்தர் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வேண்டியது அரசின் கடமை. ஆனால், அந்த கடமையை செய்யாமல் நீதிமன்ற தீர்ப்பின்படி தீபம் ஏற்ற சென்ற மனுதாரர்களையும், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரையும் கைது செய்வோம் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறை மிரட்டியுள்ளது. அதன் பிறகு மதுரையில் நடந்த அரசு விழாவில், எங்களை எதுவும் செய்ய முடியாது என நீதித்துறையையும், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிரங்க மிரட்டல் விடுத்தார்.

இப்படி இந்து கோவிலுக்குச் சொந்தமான கோவிலுக்கு இடத்தில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார் என்ற ஒரே காரணத்திற்காக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களை பதவி நீக்க செய்யும் தீர்மானம் கொண்டுவர நாடாளுமன்ற மக்களவை சபாநாயகரிடம் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் மனு அளித்துள்ளனர். இதன் மூலம் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் தாங்கள் இந்து மதம், இந்து கடவுள்கள், இந்து பண்டிகைகள், விழாக்களுக்கு எதிரானவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர். இதன் வாயிலாக பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் என்ன சொல்ல வருகிறார்கள்? திருப்பரங்குன்றம் கந்தர் மலை உச்சயில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றக் கூடாது என்கிறார்களா? நீதிமன்ற தீர்ப்புகள் தங்களுக்கு உகந்ததாக இல்லையெனில் அதை செயல்படுத்த தேவையில்லை என்கிறார்களா? எதற்காக திமுக எம்பிக்களுடன் இணைந்து நீதிபதிக்கு எதிராக மனு அளித்தீர்கள் என்பதை பிரியங்கா காந்தியும், அகிலேஷ் யாதவும் தெளிவுப்படுத்த வேண்டும். இந்து விரோதிகளான அவர்களுக்கு ஏற்கனவே அவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளனர். இனியும் பாடம் புகட்டுவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.