"இந்தியில் என்னை பேச சொல்லும்போது கோபம் வரும்"- வானதி சீனிவாசன்
சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற பாஜக மாநில செயலாளர் எஸ் ஜி சூர்யா எழுதியுள்ள 'வீர சாவர்க்கர் ஒரு கலககாரனின் கதை' எனும் புத்தக வெளியிட்டு விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி எல் சந்தோஷ்,வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்று மேடையில் உரையாற்றினர். புத்தகத்தை பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் வெளியிட மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் பெற்றுக்கொண்டனர்.
பின்னர் மேடையில் பேசிய பாஜக எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன், “தமிழகத்தில் தவறான விமர்சனங்களை வீர சாவர்க்கர் தாங்கி கொண்டிருக்கிறார். திட்டமிட்டு அரசியல் ரீதியாக செய்யப்படும் பல்வேறு விசம பிரச்சாரங்களில் சாவர்க்கர் வாழ்க்கை வரலாறும் ஒன்று. உண்மையான வரலாற்றை இந்த நூல் அறிமுகப்படுத்தும்...இவரின் புனித வாழ்க்கைக்கு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தான் அங்கீகாரம் கிடைத்தது. இன்று தமிழகம் ஒரு கடினமான சூழலில் உள்ளது. நாட்டு மக்களின் ஒற்றுமைக்கு எதிராக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. இந்தி தெரியாத ஒரு தென்னிந்திய நிர்வாகியான என்னை, சில நேரங்களில் கூட்டங்களில் இந்தியில் பேசுமாறு சொல்வார்கள். அப்போது எனக்கு மனசுக்குள் கோபம் வரும். ஆனால் அதனால்தான் எனக்கு இந்தியில் உரையாட தன்னம்பிக்கை வந்தது, அந்தமாதிரி ஒரு கட்சி ஒவ்வொரு ஊழியர்களுக்கும் ஒரு வாய்ப்பை கொடுத்து உற்சாகப்படுத்தவேண்டும், அங்கீகாரம் செய்ய வேண்டும் என்பதற்கு பாஜக ஒரு உதாரணம்” என்றார்.