பாலியல் குற்றவாளிகளை உடன்பிறப்பு என்றழைப்பதுதான் திராவிட மாடல் அரசின் புதுக் கொள்கையா?- வானதி சீனிவாசன்

 
வானதி சீனிவாசன்

கட்சித் தொண்டர்களை மட்டுமன்றி பாலியல் குற்றவாளிகளையும் உடன்பிறப்பு என்றழைப்பதுதான் திமுக அரசின் புதுக் கொள்கையா? என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வானதி சீனிவாசன்

இதுதொடர்பாக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தளத்தில், “உளுத்துப் போன இந்த திராவிட மாடல் அரசு, ஊழல் வழக்கில் கைதானவருக்கு “தியாகி” பட்டத்துடன் அதிகாரமிக்க அமைச்சர் பதவியை வழங்குவது, அப்பாவி மக்களைக் கொன்ற தீவிரவாதியின் இறுதி ஊர்வலத்திற்கு போலீஸ் பந்தோபஸ்துடன் அனுமதி கொடுப்பது, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதிகேட்டு போராடிய பெண்களை ஆடு மாடுகளைப் போல கைது செய்து அடைத்து வைப்பது போன்ற அராஜகங்களையும் தாண்டி ஒருபடி மேலேறி இன்று பல பெண்களின் வாழ்வை சூறையாடிய ஒரு மிருகத்தை, சரித்திரப் பதிவேட்டு குற்றவாளியை "தம்பி" என்றழைத்து பாசமழை பொழிந்துக் கொண்டிருக்கிறது. 



அதுவும் தகப்பன் ஸ்தானத்தில் இருக்கும் சபாநாயகர் திரு. அப்பாவு அவர்களிடமிருந்து இப்படியொரு வார்த்தை வந்திருப்பது மிகுந்த மன வேதனையளிக்கிறது. கட்சித் தொண்டர்களை மட்டுமன்றி பாலியல் குற்றவாளிகளையும் உடன்பிறப்பு என்றழைப்பதுதான் திராவிட மாடல் அரசின் புதுக் கொள்கையா? பெண்களை நாசமாக்குபவர்களைக் கட்சியில் இணைத்துக் கொண்டு அவர்களை உறவுமுறை முறை வைத்து அழைப்பவர்களின் ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு எவ்வாறு உறுதிசெய்யப்படும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.