உதயநிதிக்கு போட்டியாக உலக நாயகன் இருக்கக்கூடாது என்பதற்காகவே மிரட்டல் பெயர் மாற்றம்- தமிழிசை
ஒத்த கருத்துடையவர்கள் ஒத்துப்போய் வந்தால் அதிமுக - பாஜக கூட்டணி என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “மேயராக இருக்கும் போதிலிருந்தே சென்னை தி.மு.க. கையில் தான் இருக்கிறது. ஆனால் இன்றும் சின்ன மழை வந்தால் கூட தண்ணீர் தேங்குகிறது. மழை பெய்ய தொடங்கினால் துணை முதல்வர் கட்டுப்பாட்டு மையத்திற்கு வருவார், ஆய்வு செய்வார், பின் சென்று விடுவார். மழை நேரத்தில் பொதுமக்களாகிய நாம்தான் சிரமப்பட வேண்டிய சூழல் இருக்கிறது.
கொள்கை அடிப்படையில் மட்டும்தான் கூட்டணி அமைக்க வேண்டும் என்று இல்லை. ஒத்த கருத்துடையவர்களுடன் கூட்டணி என அண்ணன் எடப்பாடியார் அவர்கள் கூறியுள்ளார். ஒத்த கருத்து என்பது திமுக அரசை வீழ்த்துவது மட்டும் தான். ஒத்த கருத்துடையவர்கள் ஒத்துப்போய் வந்தால் நல்லது தான். தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளது. பொதுவான ஒரு கட்சியை எதிர்க்க வேண்டும் என்றுகூட ஒன்றிணையலாம். திமுகவில் இருந்து கூட சில கட்சிகள் விலகி வரலாம். 2026 ஆம் ஆண்டில் எல்லோரும் இணைந்து உறுதியாக இருக்க வேண்டுமே தவிர, உதிரியாக இருந்து உதயசூரியனுக்கு வழிவிட்டுவிடக்கூடாது. எதிர்க்கட்சிகள் உதிரியாக இருப்பதால்தான் உதயசூரியன் உதிக்கிறது. மாநில கட்சிகளுடன் ஆலோசித்த பிறகு தேசிய தலைமை கூட்டணி குறித்து முடிவு செய்யும்.
பெயரை மாற்றி, மாற்றி கடைசியில் உலகநாயகனின் பெயரை கூட மாற்ற வைத்து விட்டார்கள். உதயநிதி நாயகனுக்கு போட்டியா உலக நாயகன் இருந்துவிடக்கூடாது என்பதற்காகவே இதெல்லாம். பயந்து போய் ஊரின் நாயகனாகவே மாற முடியவில்லை நாம் ஏன் உலக நாயகன் என்று சொல்லிவிட்டு, கமல்ஹாசன் இப்போது திமுககாரராகவே மாறிவிட்டார். தமிழக அரசியலில் மிரட்டல் பெயர் மாற்றம் இதுதான். ” என்றார்.