திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது மீண்டும் நிரூபணம்- வானதி சீனிவாசன்
கோவையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கல்லூரி மாணவி... திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளதாக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை விமான நிலைய பின்புறமுள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த தனியார் கல்லூரி மாணவி ஒருவரை மூன்று பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியையும், தாங்க முடியாத துயரத்தையும் அளிக்கிறது. சென்னைக்கு அடுத்து தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய தொழில், வர்த்தக நகரான கோவையில் பெண்களுக்கு அதுவும் மாணவிக்கு பாதுகாப்பு இல்லை என்பதும், மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து புதரில் வீசிவிட்டு செல்வதும் நாகரிக சமுதாயம் வெட்கித் தலைகுனிய வேண்டிய கொடூரம். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் அடையாளமான சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டட விவகாரத்தில், யார் அந்த சார் என்பது இன்னமும் தெரியவில்லை. காவல்துறையும், திமுக அரசும் உண்மை குற்றவாளிகளை காப்பாற்றுவதால்தான் இதுபோன்ற குற்றங்கள் தொடர்கின்றன.
கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் பதிலளிக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டுமானால், அதுபோன்ற குற்றங்களில் காவல்துறையின் நடவடிக்கைகளும், தண்டனைகளும், குற்றவாளிகள் அச்சப்படும் அளவுக்கு இருக்க வேண்டும். ஆனால், தமிழ்நாட்டு காவல்துறை திமுக அரசின் ஏவல் துறையாக இருப்பதால் எந்த கொடூரத்தையும் செய்யத் துணியும் சூழல் தமிழ்நாட்டில் இருப்பதை கோவை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். பாலியல் வன்கொடுமை வழக்குகளில் குற்றம் உறுதி செய்யப்பட்டால், உடனே மரண தண்டனை வழங்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க மது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள்தான் காரணம். அதையும் கட்டுப்படுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


