சொத்துவரியா அல்லது மக்களின் சொத்துக்களை அபகரிக்கும் வரியா?- வானதி சீனிவாசன்
சொத்துவரியா அல்லது மக்களின் சொத்துக்களை அபகரிக்கும் வரியா என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2022-இல் தமிழக மக்களின் சொத்துவரியை 50% முதல் 150% வரை உயர்த்திவிட்டு, “சொத்துவரியை மனமுவந்து உயர்த்தவில்லை” என நீலிக்கண்ணீர் வடித்த நீங்கள், இன்று அதே சொத்து வரியில் மீண்டும் 6% உயர்த்துவதாக அறிவித்துள்ளது ஏன்? திர்க்கட்சியாக இருக்கும் பொழுது, சொத்துவரி உயர்வை எதிர்த்து போலி கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதும், ஆட்சிக்கு வந்த பிறகு தொடர்ந்து சொத்து வரியை உயர்த்தி தமிழக மக்களை திக்குமுக்காட வைப்பதும் தான் உங்கள் திராவிட மாடலின் ஸ்டைலா?
சாமானிய மக்களின் சொத்து வாங்கும் கனவுகளின் மீது, திராவகத்தை ஊற்றுவது போல தொடர்ந்து சொத்துவரியை அதிகரிப்பதுதான் உங்கள் சமூகநீதிக் கொள்கையா? ங்களின் தேர்தல் வாக்குறுதியில் “சொத்துவரி அதிகரிக்கப்படமாட்டாது” என்று விளம்பரப்படுத்திய நீங்கள், ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் 2 முறை சொத்துவரியை உயர்த்தியுள்ளீர்களே, இது உங்கள் பொய் வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த தமிழக மக்களுக்கு செய்யும் நம்பிக்கைத் துரோகமில்லையா?
ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், தொடர் மின்சாரக் கட்டண உயர்வு, பால் மற்றும் பல அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, பத்திரப்பதிவு கட்டண உயர்வு, வீடு கட்டுவதற்கான வரைபடக் கட்டண உயர்வு, முத்திரைத் தாள் கட்டண உயர்வு, வீட்டுவரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு என வரிகளுக்கு மேல் வரியைப் போட்டு மக்களின் தோள்களில் வரிச்சுமையை ஏற்றியுள்ளீர்களே, இதுதான் உங்கள் விடியல் ஆட்சியா? எங்கள் ஆட்சியில் தமிழகம் பொருளாதாரத்தில் சிறந்து விளங்குகிறது” என்று கூச்சமின்றி பீற்றிக் கொள்ளும் நீங்கள், உங்கள் திராணியற்ற அரசின் நிதிப் பற்றாக்குறைகளை சமாளிக்க கிடைக்கும் துறைகளிலெல்லாம் தொடர்ந்து வரியை உயர்த்தி தமிழக மக்களை வஞ்சிப்பது ஏன்?ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனக்குரலாக ஒலிக்கும் இக்கேள்விகளுக்கு பதில் வேண்டும் தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களே!” எனக் குறிப்பிட்டுள்ளார்.