"கரூர் வழக்கில் திமுக அரசுக்கு உச்சநீதிமன்றம் சரியான சவுக்கடி"- எல்.முருகன்

 
l murugan press meet l murugan press meet

கரூர் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கவும் உத்தரவிட்டிருப்பது வரவேற்கதக்கது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

l murugan

இதுதொடர்பாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக அரசின் அவல ஆட்சியால் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ள தமிழக மக்கள் கடும் கொந்தளிப்பில் இருக்கின்றனர். இதனால் அச்சத்தில் இருக்கும் திமுக அரசு, எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டங்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்காமலும், அனுமதி கொடுக்காமலும் குழப்பங்களை செய்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்தச் சூழலில் தான், கரூரில் கடந்த மாதம் 27-ம் தேதி தவெக தலைவர் மேற்கொண்ட பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்தக் கூட்டத்திற்கு அனுமதி, இடம் தேர்வு செய்வது, பாதுகாப்பு உட்பட அனைத்திலும் காவல்துறை பொறுப்புடன் நடந்து கொள்ளவில்லை. கரூர் உயிர் பலி சம்பவத்தில் தனது பொறுப்பை சரியாக நிறைவேற்றாத திமுக அரசு தவெகவுக்கு எதிராக வன்ம பிரசாரமும் செய்து வருகிறது. திமுக அரசின் விசாரணையில் உரிய நீதி கிடைக்குமா என்ற கவலை அனைவருக்கும் இருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் தற்போது திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரியான சவுக்கடி கொடுத்துள்ளது. கரூர் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் கரூர் கொடூர சம்பவத்தில் உண்மை விரைவில் வெளிவரும்; சம்பந்தப்பட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவர் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.