மாநாடு நடத்துவது அரசியல் கட்சிகளின் உரிமை.. விஜய் மாநாட்டை பார்த்து திமுக பயப்படுவது ஏன்?- எல்.முருகன்
தமிழகத்தில் ஆன்மீகம் பேசினால் கைது செய்யப்பட வேண்டும் என்பது திமுக அரசின் தவறான செயலாக இருந்துக்கொண்டிருக்கிறது. ஒருவர் பேசியதற்காக கைது நடவடிக்கை என்பது கண்டிக்கத்தக்கது என ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பாஜக உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்கள் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. அதன்படி நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள காட்டேரி பகுதியில் பாஜக உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இணை அமைச்சர் எல்.முருகன், “தமிழகத்தில் ஆன்மீகம் பேசினால் கைது செய்யப்பட வேண்டும் என்பது திமுக அரசின் தவறான செயலாக இருந்துக்கொண்டிருக்கிறது. அவர் என்ன பேசினார் என்பது குறித்து நான் பேச விரும்பவில்லை. ஆனால் ஒரு நபர் பேசினார் என்பதற்காக கைது செய்யப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மக்கள் கிராமம் கிராமமாக சிலையை வைத்து வழிப்பட்டு வருகின்றனர். தமிழகம் என்பது ஆன்மீக பூமி.
முதல்வர் ஏற்கனவே ஸ்பெயின்,துபாய் சென்று வந்துள்ளார். அதனுடைய முதலீடு என்ன என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது. அவர் ஈர்க்கும் அனைத்து நிறுவனங்களும் இந்தியாவில் உள்ளது. இதனால் தமிழகத்திற்கு எந்த ஒரு முதலீடும் வரப்போவதில்லை. மாநாடு நடத்துவது அரசியல் கட்சிகளின் உரிமை. விஜய் மாநாடு நடத்துவதை பார்த்து திமுக அரசு பயப்படுவது ஏன்? அதே நேரத்தில் விஜய் மாநாடுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவில் கருத்து சொன்னதாக தெரியவில்லை. ஆனால் ஊடகங்கள் இதை பெரிதாக்குகிறது” என்றார்.