விஜய்யால் திமுக வாக்குகளே பிரியும்- ஹெச்.ராஜா
விஜய் வந்தால் திமுகவின் வாக்குகள் தான் பிரியும் எனபாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 5-வது வார்டில் வீடு, வீடாகச் சென்ற பாஜக உறுப்பினர்கள் சேர்க்கையில் ஈடுபட்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, “பாஜகவில் இதுவரை தேசிய அளவில் 3.60 கோடி உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து செல்வபெருந்தகை ஏன் போராட்டம் நடத்தவில்லை? கடந்த 1967-க்கு பின்னர் காங்கிரஸின் ஆட்சி கவிழ்ப்பு கோட்பாட்டால் தான் மக்களவைக்கும், மாநிலங்களின் சட்டப்பேரவைக்கும் வெவ்வேறு காலக்கட்டங்களில் தேர்தல் நடத்தப்பட்டு வருகின்றன நாட்டில் ஏதாவது ஒரு இடத்தில் தேர்தல் நடந்து கொண்டே இருப்பதால், வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளனர். நாடாளுமன்றத்தில் அதற்கான சட்டங்கள் கொண்டு வரப்பட்டு முறையாக நடைமுறைப்படுத்தப்படும்.
திமுக என்பது கருணாநிதி குடும்ப கட்சி. உதயநிதிக்கு துணை முதல்வர், விளையாட்டு அமைச்சர் என எதை கொடுத்தாலும் என்ன மாற்றம் நிகழ போகிறது? அவர் எப்போதும் சனாதன தர்மத்தின் எதிரி தான். திருமாவளவனின் மதுஒழிப்பு மாநாடு, மத போதகர் மாநாடு போல் மாறி வருகிறது. கொள்கைகளை சொன்னால் தான் தனக்கு வாக்கு கிடைக்கும் என விஜய் நினைக்கிறார். அவர் வந்தால் திமுக வாக்குகள் தான் பிரியும். அது நல்லது தான்” என்று கூறினார்.