விஜய் கட்சியால் திராவிட கட்சிகளுக்கு வாக்குகள் சிதறலாம்- ஹெச்.ராஜா
நடிகர் விஜய்யின் கட்சி பாஜகவின் வளர்ச்சியை பாதிக்காது என தமிழக பாஜகவின் ஒருங்கிணைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட 36 விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ஊர்வலத்தை தமிழக பாஜகவின் ஒருங்கிணைப்பாளர் ஹெச்.ராஜா தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா, “ஆன்மீக பேச்சாளர் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டது உள்நோக்கம் கொண்டது. அவர் திருக்குறளை சுட்டிக்காட்டி ஒழுக்கம் பற்றி பேசியதால் தான், ஒழுக்கமற்ற திமுகவினர் ஆவேசம் அடைந்து அவரை தீவிரவாதி போல் கைது செய்துள்ளனர். பிரதமரை கொன்று விடுவேன் என்று பேசிய அமைச்சர் தா.மு.அன்பரசனை கைது செய்யாத திமுக அரசு ஒழுக்கத்தை கற்றுக்கொடுத்த பேச்சாளரை கைது செய்வது ஏன்? ஆகவே, தமிழக அரசு அவர் மீதான வழக்கை திரும்ப பெற்று அவரை விடுதலை செய்ய வேண்டும். மகாவிஷ்ணு குறிப்பிட்ட சிலரை காயப்படுத்தும் வகையில், எந்த கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. அப்படி தெரிவித்திருந்தால் அதற்கு நான் கூட வருத்தம் தெரிவிக்கிறேன்.
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகம் பாஜகவின் வளர்ச்சி ஒருபோதும் பாதிக்காது. திராவிட கொள்கைகளை உடைய தமிழக வெற்றிக்கழகம் அதே திராவிட கொள்கைகளை உடைய சக கட்சிகளின் வளர்ச்சி தான் பாதிக்கும்” எனக் கூறினார்.