பெட்டிக்கடையில் பணம் பறித்த பாஜக நிர்வாகி கைது

 
ப்ட்

கோவை பேரூர் அருகே பெட்டிக்கடை உரிமையாளரிடம் போலீஸ் உதவி ஆய்வாளர் எனக்கூறி ரூ.15 ஆயிரம் பறித்துச் சென்ற பாஜக நிர்வாகியை தொண்டாமுத்தூர் போலீஸார்  கைது செய்தனர். 

கோவை கணபதி பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (50). கடந்த 1997 தமிழக காவல் துறையில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2010-ல் போத்தனூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய போது பணம் வைத்து சீட்டாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தொடர்பில் இருந்ததால், பெரும்மாள் காவல் துறை பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். தற்போது கோவை மாநகர் மாவட்ட பாஜக முன்னாள் இராணுவ பிரிவு துணைத் தலைவராகவும் உள்ளார். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் கோவை பேரூர் படித்துறை டாஸ்மாக் கடை அருகே உள்ள பெட்டிக்கடைக்குச் சென்ற பெருமாள் தன்னை பேரூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் எனக்கூறி பெட்டிக்கடையில் குட்கா இருப்பதாக வழக்கு பதிவு செய்து கைது செய்து விடுவேன் எனக்கூறி கடை உரிமையாளர் வெற்றிவேல் என்பவரிடம் ரூ.15 ஆயிரம் வாங்கியுள்ளார். பின்னர் அவரை உக்கடம் வரை இரு சக்கர வாகனத்தில அழைத்து வந்து விட்டு அங்கிருந்துச் சென்றார். இது குறித்து வெற்றிவேல் தொண்டாமுத்தூர் போலீஸில் புகார் அளித்தார். 

இந்நிலையில் வெற்றிவேலின் செல்போன் எண்ணை வாங்கிச் சென்ற பெருமாள் மீண்டும் இன்னு அழைத்து ஆலாந்துறை அருகே வரும்படி கூறியதோடு, மீண்டும் பணம் கொண்டு வருமாறு தெரிவித்துள்ளார். இதையடுத்து வெற்றிவேல்  தொண்டாமுத்தூர் போலீஸுக்கு தகவல் அளித்த நிலையில், ஆலாந்துறையில் நின்றுகொண்டிருந்த பெருமாளை போலீஸார் மடக்கி பிடித்தனர். மேலும் அவரை காவல் நிலையத்தில் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கோவையில் போலீஸ் உதவி ஆய்வாளர் எனக்கூறி பெட்டிக்கடை உரிமையாளரிடம் பணம் பறித்த பாஜக நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.