டெல்லி தொடங்கி மதுரை வரை திமுக அரசை நீதி துரத்துகிறது- அண்ணாமலை

 
annamalai mkstalin annamalai mkstalin

கிட்னி முறைகேடு வழக்கு, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்த வழக்குகளில் தமிழக அரசுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. டெல்லி தொடங்கி மதுரை வரை, திமுக அரசை நீதி துரத்துவதாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

annamalai

இதுதொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், “திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கும், அரசியல் காழ்ப்புணர்வுக்கும், மாண்புமிகு உச்சநீதிமன்றமும், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையும், இன்று தகுந்த பாடம் கற்பித்திருக்கிறார்கள். 

1) திமுக எம்எல்ஏவுக்குச் சொந்தமான மருத்துவமனைகளுடன் தொடர்புடைய கிட்னி திருட்டு குறித்து விசாரிக்க, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் அமைக்கக் கூறிய சிறப்புப் புலனாய்வுக் குழுவில், தாங்கள் பரிந்துரைக்கும் அதிகாரிகளையே நியமிக்க வேண்டும் என்ற திமுக அரசின் நிபந்தனையை ஏற்க மறுத்து மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பில் தலையிட, மாண்புமிகு உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. திமுக எம்எல்ஏவுக்கு எதிரான விசாரணைக் குழுவில், திமுக அரசு பரிந்துரைக்கும் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்ற திமுகவின் நிபந்தனை எவ்வளவு வெட்கக்கேடானது.

2) பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் திரு ஆம்ஸ்ட்ராங் அவர்கள் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகிய திமுகவுக்கு, அந்த வழக்கிலும் பின்னடைவே ஏற்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தடை செய்ய உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் கொலை வழக்கில், சிபிஐ விசாரணைக்கு திமுக அரசு ஏன் பயப்படுகிறது?


3) கரூர் தவெக பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்து சிபிஐ விசாரணை கோரிய வழக்கில், தமிழக அரசை உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது. கரூர் கூட்ட நெரிசல் வழக்கு மதுரை பெஞ்சில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் அதை எவ்வாறு விசாரித்தது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது. 

4) திருப்பரங்குன்றம் வழக்கில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளில், இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்புக்குப் பிறகு, 3வது நீதிபதியான நீதியரசர் திரு. விஜய் குமார் அவர்கள், நீதியரசர் ஸ்ரீமதி அவர்களின் கருத்துக்களுடன் உடன்பட்டு, சிக்கந்தர் தர்காவில், விலங்குகளை பலியிடுவதைத் தடை செய்துள்ளார். இந்த மலையை திருப்பரங்குன்றம் மலை என்றே தொடர்ந்து அழைக்க வேண்டும்.

ஒரே நாளில், டெல்லி முதல் மதுரை வரை, திமுகவின் மனசாட்சியை விட வேகமாக, நீதியும் தர்மமும் திமுகவைத் துரத்திக் கொண்டிருக்கின்றன” எனக் குறிப்பிட்டுள்ளார்.