“பாஜகவில் புடிச்சிருந்தா இருக்கப் போறேன். இல்லைனா கிளம்பப் போறேன்” - அண்ணாமலை
வேலையை விட்டுவிட்டு வந்து பாஜகவில் பயணம் செய்கிறேன். புடிச்சிருந்தா இருக்கப் போறேன். இல்லைனா கிளம்பப் போறேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “அமித்ஷாவும், மோடியும் தூய அரசியலை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையோடுதான் வேலையை விட்டுவிட்டு வந்து பாஜகவில் பயணம் செய்கிறேன். பிடித்திருந்தால் இருக்கப்போறேன். இல்லையெனில் கிளம்பப்போறேன்.அதிமுகவில் இன்னும் சில தலைவர்கள் என்னை திட்டிக்கொண்டு இருக்கிறார்கள். எனது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. அமித்ஷா வாக்குக்காக கட்டுப்பட்டு இருக்கிறேன். பசும்பொன்னில் ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் ஒருங்கிணைந்ததற்கு நான் காரணம் இல்லை. யூகத்திற்கு இடம் கொடுக்க கூடாது என்பதற்காக சொல்கிறேன். சில நேரங்களில் தலைவர்களின் பேச்சைக் கேட்டு சபை நாகரித்திற்காக எனது மனசாட்சிக்கு எதிராகக்கூட பேச வேண்டிய சூழல் வருகிறது. மனசு ஒன்னு சொல்லுது, வாய் ஒன்னு சொல்லுது.
நகராட்சி நிர்வாகத்துறை பணி நியமனத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும். பதவிலாம் வெங்காயம் மாதிரி. உரிச்சா ஒன்னுமே இருக்காது. மகாத்மா காந்தி என்ன பதவியில் இருந்தார்? நகராட்சி நிர்வாகத்துறையில் நடந்த ரூ.888 கோடி ஊழலுக்கு பல்வேறு ஆதாரங்களை ED கொடுத்துள்ளது. முதல்வர் அவர்கள் உடனடியாக DGP அவர்களை FIR பதிவு செய்ய சொல்ல வேண்டும். அப்போதான் ED களத்திற்கு வர முடியும். ஆனால் முதல்வர் இதை செய்யாமல் திசை திருப்புகிறார். அமைச்சர் கே.என்.நேரு துறையில் ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை தமிழக டிஜிபிக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அமலாக்கத்துறை கொடுத்த கடிதத்தின் அடிப்படையில் FIR பதிவு செய்ய வலியுறுத்தியுள்ளது. வேறொரு வழக்கில் கே.என்.நேரு சகோதரர் வீட்டில் ஆய்வு செய்யும்போது நகராட்சி நிர்வாகத் துறை முறைகேடு தொடர்பான ஆவணங்கள் கிடைத்தன” என்றார்.


