விஜய் கரூர் வருவதற்கு போலீசாரின் அனுமதி எதற்கு? மக்கள் என்ன பூதமா?- அண்ணாமலை
விஜய் கரூர் வருவதற்கு போலீசாரின் அனுமதி எதற்கு? அங்கு யார் வேண்டுமானாலும் செல்லலாம் என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கருத்து கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, “விஜய் கரூர் வருவதற்கு போலீசாரின் அனுமதி எதற்கு? அங்கு யார் வேண்டுமானாலும் செல்லலாம். அன்பான கரூர் மக்களுக்கு வருவோரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என தெரியும். இந்தியாவில் உள்ள சில பகுதிகளைப் போல அச்சுறுத்தல் காரணமாக அனுமதி பெற்று விஜய் கரூர் செல்ல வேண்டிய அவசியம் தமிழ்நாட்டில் இல்லை. யார் வேண்டுமானாலும் எந்த இடத்திற்கும் எந்த நேரத்திலும் செல்லலாம். கரூர் மக்கள் பயங்கரவாதிகள் அல்ல. கரூரில் என்ன பூதமா உள்ளது? கரூர் மக்கள் அன்பானவர்கள். விஜய் தாராளமாக வந்து பார்க்கலாம். நானும் கரூரை சேர்ந்தவன் தான். எங்கள் ஊருக்கு வர எதற்கு அனுமதி வேண்டும்? இந்த நேரத்தில் கரூர் மக்களையும் விட்டுக் கொடுக்க முடியாது. டிஜிபி அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்க வேண்டிய அவசியம் தமிழகத்தில் இல்லை என்று நான் நினைக்கிறேன்.
முதல்வர் வருகைக்காக கோவையில் அரைநாள் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை அளித்தது மக்களுக்கே பிடிக்கவில்லை. எதற்கு பள்ளிக்கு விடுமுறை அளிக்கவேண்டும்? திமுக அரசியல் ஆதாயத்திற்காக பள்ளிகளை பயன்படுத்தி வருகிறது. ஆதவ் அர்ஜுனா விவகாரத்தில் திருமாவளவன் வெளிப்படையாக இருக்க வேண்டும். திருமாவளவனின் பேச்சு பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவதுபோல் உள்ளது, ஆதவ் அர்ஜுனாவை கட்சியை விட்டு அனுப்பிவிட்டு ஏன் இன்னும் திருமாவளவன் அவருடன் நட்பு பாராட்டுகிறார்? ஆதவ் அர்ஜுனாவை தவெகவுக்கு அனுப்பி வைத்துவிட்டு பாஜக மீது குற்றம் சாட்டுவதா?” எனக் கேள்வி எழுப்பினார்.


