டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு பில்! அமலுக்கு வந்தது

 
பில்

ராணிப்பேட்டையில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு பில் வழங்கி விற்பனை செய்தனர்.

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு பில் வழங்கும் நடைமுறை  செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக  ராணிப்பேட்டை மாவட்டத்தில் 7 கடைகளில் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டது தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. தரமான மதுபாட்டில்களை, நியாயமான விலைக்கு விற்பனை செய்ய டாஸ்மாக் கடைகளை நவீனமயமாக்கும் முயற்சிகளை டாஸ்மாக் நிர்வாகம் எடுத்து வருகிறது. டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு ரசீது வழங்குதல், மதுபாட்டில்களில் பார்கோட் அச்சிட்டு அதன் மூலம் தொடர்ச்சியாக கண்காணிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளின் செயல்பாடுகளை கணினிமயமாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த பில்லிங் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் உள்ள விற்பனையாளர்கள் கையடக்க ஸ்கேனர் மூலம் ஒவ்வொரு பாட்டிலிலும் உள்ள கலால் வரியுடன் கூடிய லேபிள்களை ஸ்கேன் செய்து பில் ரசீதுகளை வாடிக்கையாளரிடம் வழங்குகின்றனர். அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 83 டாஸ்மாக் கடைகள் இயங்குகிறது. தற்போது மாவட்டத்தில் வாணாபாடி, லாலாப்பேட்டை, வன்னிவேடு, தாஜ்புரா, நந்தியாலம், ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில் ஸ்கேன் செய்து  வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்யப்பட்டது.

மதுபாட்டில்களை ஸ்கேன் செய்தால், அந்த பாட்டில் எங்கே வாங்கப்பட்டது, எந்த தேதியில் வாங்கப்பட்டது, இது எந்த பேட்ச்சை சேர்ந்தது, மதுபான ஆலையில் இருந்து எப்போது வெளியே கொண்டு வரப்பட்டது போன்ற பல்வேறு விவரங்களை தெரிந்து கொள்ள முடியும்.