பழனி பஞ்சாமிர்தத்திலும் மாட்டுக்கொழுப்பா?? பாஜக நிர்வாகி மீது புகார்..
திருப்பதி லட்டை தொடர்ந்து பழனி பஞ்சாமிர்தத்திலும் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் , கோயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பழனி தண்டாயுதபாணி கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், “X என்ற சமூக தளத்தில், திரு Vinoj P Selvam (@VinojBJP), மற்றும் திரு Selva Kumar (@Selvakumar_IN) ஆகியோர் "திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நெய் விநியோகம் செய்த திண்டுக்கல் A.R.Foods நிறுவனம் தான் பழனி முருகன் கோவிலுக்கும் நெய் விநியோகம் செய்கிறது" என்றும், "திருப்பதி வட்டு தயாரிக்க சப்ளை செய்யப்பட்ட நெய்யில் மாட்டு இறைச்சி கொழுப்பு, பன்னி இறைச்சி கொழுப்பை கலந்து விற்ற உத்தமர் ராஜசேகர்தான் (AR Foods) பழனி முருகன் கோவிலுக்கும் நெய் சப்ளை செய்கிறார்" என்றும், பழதி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் பக்தர்களை ஏமாற்றும் பொருட்டும், தமிழ்நாடு அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், பக்தர்கள் மத்தியில் குழப்பமும் கொந்தளிப்பும் ஏற்படும் சூழ்நிலையை உருவாக்கவும், மதக்கலவரத்தை தூண்டிவிட்டு மனித உயிர் இழப்புகள் ஏற்படக்கூடிய சூழ்நிலையை உருவாக்கிடவும் திட்டமிட்டு அவதூறு செய்திகளை மேற்படி இரு நபர்களும் பரப்பியுள்ளனர்.
அருள்மிகு முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடாகத் திகழும் பழதி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலிலிருந்து தயார் செய்யப்படும் தரமான பஞ்சாமிர்தத்தினை அருட்பிரசாதமாக பெற்றுச் செல்கின்றனர். பஞ்சாமிர்தம் தயார் செய்வதற்குத் தேவையான வாழைப்பழம். நாட்டுச்சர்க்கரை, தேன். பேரீச்சம்பழம், ஏலக்காய், கற்கண்டு மற்றும் நெய் ஆகிய முதல்தரமான மூலப்பொருட்களே பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றில் நெய்யினை திண்டுக்கல் ஆவின் நிறுவனத்திடமிருந்து மட்டுமே கொள்முதல் செய்து பயன்படுத்தப்பட்டு வருகிறது எனத் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மேலும் இத்திருக்கோயிலின் பஞ்சாமிர்த தயாரிப்பினை அவ்வப்போது உணவுப்பாதுகாப்பு துறையால் தரப்பரிசோதனை செய்து வரப்படுகிறது. பஞ்சாமிர்த தயாரிப்பு மூலப்பொருட்களில் எவ்வித கலப்பட பொருள்களோ, தரம் குறைந்த பொருள்களோ இருப்பதாக உணவுப் பாதுகாப்புத் துறையால் எப்போதும் தெரிவிக்கப்பட்டதில்லை. மேலும் மேற்படி அவதூறு செய்திகளைப் பரப்பிய நபர்கள் மீது உரிய குற்றவியல் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது.
ஆகவே பழனி திருக்கோயில் நிர்வாகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தவும். தமிழ்நாடு அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், பக்தர்கள் மத்தியில் குழப்பமும் கொந்தளிப்பும் ஏற்படும் சூழ்நிலையை உருவாக்கவும், மதக்கலவரத்தை தூண்டிவிட்டு மனித உயிர் இழப்புகள் ஏற்படக்கூடிய சூழ்நிலையை உருவாக்கிடவும் திட்டமிட்டு தீய உள்நோக்கத்துடன் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டுவரும் அவதூறு செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என பக்தர்களையும் பொதுமக்களையும் திருக்கோயில் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். மேலும் இதுபோன்ற அவதூறான செய்திகளை சமூக ஊடகங்களில் எவரும் வெளியிடவோ பரப்பவோ வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.