ரவுடிக்கு துப்பாக்கி வாங்கி கொடுத்த பாஜகவை சேர்ந்த வழக்கறிஞருக்கு பார் கவுன்சில் தடை

 
ரவுடிக்கு துப்பாக்கி வாங்கி கொடுத்த பாஜகவை சேர்ந்த வழக்கறிஞருக்கு பார் கவுன்சில் தடை

ரவுடி சீர்காழி சத்யாவுக்கு கள்ளத்துப்பாக்கி வழங்கிய விவகாரத்தில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பாஜகவை சேர்ந்த அலெக்சிஸ் சுதாகர் உள்ளிட்ட 3 பேருக்கு வழக்கறிஞர்களாக பணிபுரிய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தடை விதித்தது.

தமிழக பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளராக பதவி வகித்து வருபவர் அலெக்ஸிஸ் சுதாகர். இவர் தனது பிறந்த நாளை முன்னிட்டு கடந்த ஜூன் 27ஆம் தேதி இரவு மாமல்லபுரம் அருகே இளந்தோப்பு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அந்த நிகழ்ச்சியில் பாஜகவில் உள்ள முக்கிய நிர்வாகிகள், பிரபல ரவுடிகள், சரித்திர பதிவேடு குற்றவாளிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு வெளியே வந்த பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வருபவரான பிரபல ரவுடி சீர்காழி சத்யாவின் வாகனத்தை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து தனது கூட்டாளிகள் செங்கல்பட்டு அருகே பழவேலி பகுதியில் உள்ள மலைப்பகுதியில் பதுங்கி இருப்பதாக தெரிவித்ததன் அடிப்படையில் சீர்காழி சத்யாவுடன் போலீசார் சென்று இருந்தனர். 

அப்போது சீர்காழி சத்யா தான் மறைத்து வைத்திருந்த பட்டாகத்தி எடுத்து உதவி ஆய்வாளர் ரஞ்சித் குமாரை வெட்டிவிட்டு தப்பியோட முயற்சித்தார். அப்போது போலீசார் தப்பியோட முயன்ற சீர்காழி சத்யாவின் காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இந்த விவகாரத்தில் சத்யாவின் கூட்டாளிகளான பால்பாண்டி, மாரிமுத்து ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மூன்று பேரிடமிருந்து ஒரு துப்பாக்கி, 5-தோட்டாக்கள் மற்றும் பட்டாகத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பிரபல ரவுடி சீர்காழி சத்யாவிற்கு பாஜக மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அலெக்ஸிஸ் சுதாகர் துப்பாக்கியை வாங்கி கொடுத்ததாக போலீசாரன் விசாரணையில் சீர்காழி சத்யா தெரிவித்துள்ளார். தொடர்ந்து அலெக்ஸிஸ் சுதாகரை கைது செய்து மாமல்லபுரம் போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும், அலெக்சிஸ் சுதாகர் மீது மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

இந்நிலையில் ரவுடி சீர்காழி சத்யாவுக்கு கள்ளத்துப்பாக்கி வழங்கிய விவகாரத்தில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பாஜகவை சேர்ந்த அலெக்சிஸ் சுதாகர் உள்ளிட்ட 3 பேருக்கு வழக்கறிஞர்களாக பணிபுரிய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தடை விதித்தது.