புதுச்சேரியில் பந்த் தொடங்கியது.. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..

 
புதுச்சேரி  சட்டப்பேரவை

மின் கட்டணம் உயர்வைக் கண்டித்து புதுச்சேரியில்  இந்தியா கூட்டணி கட்சி சார்பில் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது. இதன்காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  

புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இடையே மக்களவைத் தேர்தல் குறுக்கிட்டதால், மின் கட்டண உயர்வை அரசு நிறுத்தி வைத்தது. தேர்தல் முடிந்த பின் கடந்த ஜூன் 16ம் தேதி மீண்டும்   முன்தேதியிட்டு மின் கட்டண உயர்வை அரசு அமல்படுத்தியுள்ளது. மின் கட்டண உயர்வுக்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் கடந்த 2ம் தேதி ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போதே, விநாயகர் சதுர்த்திக்கு பிறகு 18ம் தேதி பந்த் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தனர்.

பள்ளி விடுமுறை

அதன்படி புதுச்சேரியில்  இன்று காலை முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது. பந்த் காரணமாக புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், டெம்போ, ஆட்டோ ஆகியவை இயங்கவில்லை. இதனால் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. திரையரங்குகள், தனியார் வர்த்தக நிறுவனங்கள், பெரிய மார்க்கெட், குபேர் அங்காடி உள்ளிட்ட புதுச்சேரியில் அனைத்து கடைகளும் முழுவதுமாக மூடப்பட்டுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

பேருந்து, ஆட்டோ, டெம்போக்கள் ஓடாததால் பொதுமக்கள் மற்றும் வெளியூர் பயணிகள் தங்களது இடங்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். முழு அடைப்பு போராட்டத்தையொட்டி சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  தமிழகம் - புதுச்சேரி இடையே அரசு பேருந்துகள் குறைந்த அளவில் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கபட்டது. மேலும் பந்த் காரணமாக புதுச்சேரியில் இன்று 1 முதல் 8ம் வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.