நகைச்சுவை நடிகருக்கு பாலா, ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி

 
பாலா

நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ்க்கு  நடிகர் பாலா, ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி வழங்கியுள்ளனர்.

ஆந்திர மாநிலம் விஜயவாடா பக்கம் புனாதிபாடு கிராமத்தில் பிறந்தவர் நடிகர் வெங்கல் ராவ் .  சினிமாவில் ஃபைட்டராகத் தன் பயணத்தை தொடங்கிய வெங்கல் ராவ், சண்டைக் காட்சிகளின்போது விபத்து ஏற்பட்டு கால்முட்டி, தோள்பட்டையில் அடிப்பட்ட காரணத்தினால் நடிகராக மாறியவர். 'பணக்காரன்', 'ராஜாதி ராஜா' கால ரஜினி, அமிதாப், தர்மேந்திரா உள்பட பலருக்கும் டூப் போட்டவர் வெங்கல் ராவ். இருப்பினும் வடிவேலுடன் சேர்ந்து தோன்றிய காமெடி காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. வடிவேலு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த காலகட்டத்தில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட பல நடிகர்களில் வெங்கல் ராவ்வும் ஒருவர்.  கடந்த ஆண்டு இவருக்கு சிறுநீரகம் செயலிழந்து, வீட்டில் ஓய்வில் இருந்த நிலையில், தற்போது ஒரு கை, ஒரு கால் செயலிழந்து விஜயவாடாவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கை, கால்கள் செயலிழந்து ஆந்திராவில் உள்ள தனது இல்லத்தில் சிகிச்சை பெற்றுவரும் வெங்கல் ராவ், வீடியோ வெளியிட்டு உதவி கோரிய நிலையில், அவருக்கு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ரூ. 25,000மும், சின்னத்திரை நடிகர் பாலா ரூ. 1 லட்சமும் கொடுத்து உதவி செய்துள்ளனர். முன்னதாக நடிகர் வெங்கல் ராவ்வின் மருத்துவ சிகிச்சைக்காக நடிகர் சிம்பு ரூ. 2 லட்சம் வழங்கினார் என்பது குறிப்பிடதக்கது.