பத்லாபூர் என்கவுன்ட்டரில் மும்பை போலீஸை சாடிய ஐகோர்ட்..!
பத்லாபூர் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அக்ஷய் ஷிண்டே காவலில் கொல்லப்பட்ட விவகாரத்தில் மும்பை போலீஸை கண்டித்துள்ள மும்பை உயர் நீதிமன்றம், இதில் ஏதோ நாடகம் இருக்கிறது இதனை என்கவுன்ட்டர் என ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளது.
மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அக்ஷய் ஷிண்டே சிறையில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டது முதல் சிவாஜி மருத்துவமனையில் அவர் இறந்து விட்டார் என அறிவிக்கப்பட்டது வரையிலான சிசிடிவி கேமரா காட்சிகளை பாதுகாத்து வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
அக்ஷய் ஷிண்டே போலி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டதாகவும், இந்த சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று அவரது தந்தை அன்னா ஷிண்டே மும்பை உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்திருந்தார். தனது மனுவில், மகாராஷ்டிராவில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டே தனது மகன் என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டியிருந்தார்.
அவரது மனுவினை மும்பை உயர் நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அப்போது மகாராஷ்டிரா அரசு சார்பில் தலைமை அரசு வழக்கறிஞர் ஆஜராகி வாதாடினார். அப்போது அவர் நடந்த சம்பவங்களை வரிசையாக எடுத்துக் கூறினார்.
அதனைத் தொடர்ந்து உயர் நீதிமன்றம் கூறுகையில், “இவற்றை நம்புவதற்கு மிகவும் கடினமாக உள்ளது. முதல் பார்வையிலேயே இதில் ஒரு நாடகம் இருப்பது தெரிகிறது. ஒரு சாதாரண மனிதனால் அசாதாரணமாக ஒரு சாமானியரைப் போல துப்பாக்கியை எடுத்துச் சுட்டுவிட முடியாது. ஒரு பலவீனமான மனிதனரால் துப்பாக்கியை லோடு செய்ய முடியாது. அதற்கு மிகவும் வலிமை வேண்டும்.
குற்றஞ்சாட்டப்பட்ட மனிதர் வலிமையானர் இல்லை. அவர் முதலில் துப்பாக்கி விசையை இயக்கியதும், மற்ற நான்கு போலீஸ் அதிகாரிகளால் அவர் முறியடிக்கப்பட்டிருக்கலாம். இதனை என்கவுன்ட்டர் என்று சொல்ல முடியாது. இது என்கவுன்ட்டர் இல்லை.” என்று தெரிவித்தது.