கையில் வீச்சரிவாள்... பட்டப்பகலில் வீடு புகுந்து கொலை முயற்சி! தென்காசியில் பரபரப்பு
பாவூர்சத்திரம் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து அரிவாளுடன் ஒரு குடும்பத்தையே வெட்ட முயன்ற வாலிபரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள மருதடியூர் நடுத்தெருவை சேர்ந்த 35 வயதுடைய கணேஷ் என்பவர் சாக்கு தைக்கும் தொழில் செய்து வருகிறார். இன்று மதியம் கணேஷ் தனது வீட்டின் முன்பு தனது இரு குழந்தைகளுடன் நின்றிருந்தபொழுது அதே பகுதியை சேர்ந்த 27 வயது கலைச்செல்வன் என்பவர் கையில் அரிவாளுடன் கணேஷ் மற்றும் அவரது குழந்தைகளை நோக்கி வெட்டுவதற்கு ஓடிவந்தார். சுதாரித்துக் கொண்ட கணேஷ் தனது இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வீட்டினுள் சென்று கதவை பூட்டி உள்ளார். அரிவாளுயுடன் ஆக்ரோசமாக வந்த கலைச்செல்வன் வீட்டின் வெளியே நின்றிருந்த கணேசின் தாயாரை தாக்க முற்பட்டார். மேலும் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த கணேசின் பைக் சீட்டில் அரிவாளால் கொத்தி உன்னை வெட்டாமல் விடமாட்டேன் என்றும் தகாத வார்த்தைகளாலும் திட்டி உள்ளார். அருகில் இருந்த நபர்கள் சத்தம் கேட்டு ஓடி வரவும் அங்கிருந்து கலைச்செல்வன் தப்பியோடி விட்டார்.
இதுகுறித்து கணேஷ் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணையில் சில மாதங்களுக்கு முன்பு மருதடியூர் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கணேஷ் மற்றும் கலைச்செல்வனுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதில் ஏற்பட்ட முன்பகை காரணமாக கணேசை கலைச்செல்வன் அரிவாளுடன் வந்து வெட்ட முற்பட்டார் என்கிற தகவலும் வெளியாகி உள்ளது. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே பட்டப்பகலில் குழந்தைகளுடன் நின்ற நபரை இளைஞர் ஒருவர் அரிவாளுடன் துரத்திச் சென்று வெட்ட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.