“குற்றவாளியாக அன்புமணியை சேர்க்க வேண்டும்”- ஐகோர்ட்டில் அருள் எம்.எல்.ஏ மனுதாக்கல்

 
அருள் அருள்

தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்டோரை குற்றவாளிகளாக சேர்க்க உத்தரவிடக்கோரி பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

“அன்புமணி பதவிக்காக அப்பாவை விட்டு போகிறார்”- பா.ம.க. எம்.எல்.ஏ.அருள்

சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் அருள், இவர் ராமதாஸின் தீவிர ஆதரவாளர். இவருக்கும் அன்புமணி ராமதாஸின் ஆதரவாளர்களுக்கும் சேலத்தில் கடுமையான மோதல் நிலவி வருகிறது.  இதுகுறித்து, ஏற்கனவே பாமக எம்எல்ஏ அருள், காவல் நிலையத்தில், தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு வழங்க வேண்டும் என புகார் மனுவை அளித்துள்ளார் .

இந்நிலையில், வாழப்பாடியில் உள்ள கட்சியின் நிர்வாகி இல்லத்தில் நிகழ்ந்த இறுதிச் சடங்கில் பங்கேற்று விட்டு, பாமக எம்எல்ஏ அருள் கார் மூலம் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, சிலர் அருள் சென்ற கார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து அருள் உடன் சென்ற ஆதரவாளர்களும் கல் வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர். பிறகு உருட்டுக்கட்டையால் இருதரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதில் பாமக சட்டமன்ற உறுப்பினர் அருளின் கார் சேதமடைந்தது. காருக்குள்ளே அமர்ந்திருந்த அருளை கட்சி நிர்வாகிகள் பாதுகாத்தனர்.  இதனைத் தொடர்ந்து, சேலம் எஸ்பி அலுவலகத்தில் பாமக எம்எல்ஏ அருள் புகார் அளித்தார். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு ஆஜரான அருள் தரப்பு வழக்கறிஞர் கோபு, தாக்குதல் சம்பந்தமாக குற்றவாளியாக பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்டோரை சேர்க்க வேண்டும் என்றும், இது தொடர் சம்பவமாக நடைபெறுவதால் விரிவாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என முறையிட்டார். இதையடுத்து நீதிபதி, மனுவாக தாக்கல் செய்யுங்கள் நாளை மறுதினம் விசாரிப்பதாக தெரிவித்துள்ளார்.