ஆம்ஸ்ட்ராங் கொலை - புழல் சிறைக்கு கைதிகள் மாற்றம்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி பூவிருந்தவல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 23 பேர் புழல் சிறைக்கு மாற்றம்.செய்யப்பட்டுள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆர்ம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் அவரது வீட்டின் அருகே மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக செம்பியம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பல்வேறு கட்சிகளை சேர்ந்த 28 பேரை கைது செய்தனர். ரவுடி சீசிங் ராஜாவை ஆந்திராவில் கைது செய்து சென்னை அழைத்து வந்த போது தப்ப முயன்றதால் என்கவுண்டர் செய்யப்பட்டிருந்தார்.
இதேபோல் சிறையிலிருந்து போலீஸ் காவலில் அழைத்துவரப்பட்ட திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில், வழக்கின் முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி நாகேந்திரன் வேலூர் சிறையிலும், மூன்று பெண் கைதிகள் புழல் மகளிர் சிறையிலும், எஞ்சிய 23 பேர் பூவிருந்தவல்லி கிளை சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தனர். அண்மையில் பூவிருந்தவல்லி கிளைச் சிறையில் கைதிகள் சிலர் செல்போன் பயன்படுத்தி விசாரணைக்கு சென்ற துணை கண்காணிப்பாளருக்கும் மிரட்டல் விடுத்திருந்தனர். இந்நிலையில் பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பூவிருந்தவல்லி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அஸ்வத்தாமன், பொன்னை பாலு உட்பட 23 பேரை நள்ளிரவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.