மணிப்பூரில் ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டம் மீண்டும் அமல்..!

 
1

மணிப்பூர் மாநிலம் இம்பால் மேற்கு மாவட்டத்தின் சேக்மாய், லாம்சங், இம்பால் கிழக்கு மாவட்டத்தின் லாம்லை, ஜிரிபாம் மாவட்டத்தின் ஜிரிபாம், காங்போக்பியின் லீமாங்கோங் மற்றும் பிஷ்னுபூரின் மோய்ராங் ஆகிய 6 காவல் நிலைய பகுதிகளில் ஆயுதப் படைகளின் சிறப்பு சட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இனக் கலவரம் காரணமாக அந்தப் பகுதிகளில் தொடர்ந்து கொந்தளிப்பான சூழல் நிலவுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் 1-ம் தேதி மணிப்பூர் அரசு மாநிலம் முழுவதும் AFSPA சட்டத்தை அமல்படுத்தியதைத் தொடர்ந்து இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் இந்த ஆறு காவல் நிலையங்கள் உட்பட 19 காவல் நிலையங்கள் விலக்கு அளிக்கப்பட்டிருந்தன. மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் திங்கள்கிழமை பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 11 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு அடுத்த நாள் குழந்தைகள், பெண்கள் உட்பட ஆறு பேரை தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.

முன்னதாக, வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் மைத்தேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதன்காரணமாக மாநிலம் முழுவதும் கலவரம் வெடித்து இதுவரை 237 பேர் உயிரிழந்துள்ளனர். 1,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இம்பால் பள்ளத்தாக்கு மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலை பகுதிகள் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட போதும் இன ரீதியாக பிளவுபட்டுள்ள ஜிரிபாம் மாவட்டம் அந்த பாதிப்பில் இருந்து விலகியே இருந்தது. என்றாலும் ஜூன் மாதம் அங்குள்ள வயலில் விவசாயி ஒருவரின் சிதைந்த உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அங்கும் வன்முறை தொற்றிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.