திருப்பதி போறீங்களா ? இன்று அக்டோபர் மாதத்திற்கான தரிசன டிக்கெட் வெளியீடு..!

உலக பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால் பக்தர்கள் வெள்ளத்தால் திருப்பதி கோயில் எப்போதும் நிரம்பி வழிந்தபடியே இருக்கும்.
குறிப்பாக சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். திருமலைக்கு வரும் பக்தர்கள் முன்கூட்டியே ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது.
இந்நிலையில், அக்டோபர் மாதம் தரிசனம் செய்வதற்கான டிக்கெட் ஆன்லைனில் வெளியிடும் தேதிகளை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
அதன்படி இன்று 18-ம் தேதி காலை 10 மணி முதல் 20-ம் தேதி காலை 10 மணி வரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை உள்ளிட்ட சேவைகளுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். அன்று மதியம் 12 மணிக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் பக்தர்கள் பணம் செலுத்தி டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.
கல்யாண உற்சவம், ஊஞ்சல் உற்சவம், ஆர்ஜித பிரமோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கான டிக்கெட்டுகள் வரும் 22-ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
அக்டோபர் மாதம் அங்க பிரதட்சணம் செய்வதற்கான இலவச டோக்கன்கள் வரும் 23-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் . ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை செலுத்தி பெறும் வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகள் வரும் 23-ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.