ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்துக்குள் நுழைந்த மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள்! அதிரடி நடவடிக்கை

 
ஏ.ஆர். டெய்ரி ஃபுட் நிறுவனத்தின் கழிவுநீரை ஆய்வுக்கு எடுத்து சென்ற அதிகாரிகள்

திருப்பதி லட்டு செய்வதற்காக நெய் சப்ளை செய்த  திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரிஃபுட் (பி) லிட் நிறுவனத்தில் கழிவு நீரை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் ஆய்விற்காக எடுத்துச் சென்றனர். 

திண்டுக்கல்லில் - மதுரை சாலையில் ஏ.ஆர். டெய்ரிஃபுட் (பி) லிட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து திருப்பதி லட்டு தயாரிப்பிற்காக நெய் அனுப்பும் ஒப்பந்தம்  போடப்பட்டு நெய் அனுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் நெய்யில் விலங்குகளின் கொழுப்புகள் கலந்து உள்ளதாக குஜராத்தை சேர்ந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து திண்டுக்கல்லில் உள்ள ஏ.ஆர். டெய்ரிஃபுட் (பி) லிட் நிறுவனத்திற்கு  வழங்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இது தற்பொழுது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஏ ஆர் நிறுவன  தர கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் லெனி மற்றும் கண்ணன் ஆகியோர் இன்று 20.09.24  தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மாலை  திண்டுக்கல் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உதவி செயற்பொறியாளர் அனிதா திடீரென ஏ.ஆர். டெய்ரிஃபுட் (பி) லிட் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டார். இதில் நிறுவனத்தில் பால் பொருள்கள் தயாரிக்கப்படும் பொழுது வெளியேற்றப்படும் கழிவு நீரை ஆய்விற்காக எடுத்து சென்றுள்ளார். மேலும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உதவி செயற்பொறியாளர் அனிதா தெரிவிக்கும் போது, ஆய்விற்காக கழிவுநீர்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இந்த கழிவு நீர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் ஆய்வு செய்யப்படும் ஆய்வில் குறைபாடுகள் இருக்கும் பட்சத்தில் நடவடிக்கையை எடுக்கப்படும் என தெரிவித்து சென்றுள்ளார்.