திருப்பதி லட்டு விவகாரம்- ஏ.ஆர் டெய்ரி நிறுவன உரிமையாளர் முன்ஜாமின் கோரி மனு
ஆந்திர மாநிலம் அமராவதியில் உள்ள உயர் நீதிமன்றத்தில் திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி உரிமையாளர் ராஜசேகரன் முன்ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு தயாரிக்க பயன்படுத்த டெண்டர் மூலம் நெய் சப்ளை செய்த ஏஆர் டெய்ரி நிறுவனம் கலப்பட நெய் சப்ளை செய்ததாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அளித்த புகாரின் பேரில் திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏ.ஆர். டெய்ரி நிறுவனர்
ஆர்.ராஜசேகரன் இந்த வழக்கில் கைது நடவடிக்கையுடன் வேறு எந்த அவசர நடவடிக்கை எடுக்க வேண்டாம் என நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.மேலும் அந்த மனுவில் நெய் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்வதில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றவில்லை.
நெய் கலப்படம் குறித்த புகார்கள் மீது தன்னிடம் இருந்து எந்தவித விளக்கம் பெறாமல் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது சட்டத்திற்கு புறம்பானது. தன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரம் இல்லை , அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையால் கைது செய்யப்பட்டால், சீர்செய்ய முடியாத சேதம் ஏற்பட்டுவிடுமோ என்று கவலை இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.எனவே தனக்கு முன்ஜாமீன் வழங்கினால் நீதிமன்றம் விதிக்கும் எந்த நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுவேன் என்று ஏஆர் டைரி நிறுவனர் ராஜசேகர் தெரிவித்துள்ளார். இந்த ஜாமின் மனு நாளை விசாரணைக்கு வரும் என தெரிகிறது.