இன்று முதல் 5 நாட்களுக்கு மழை - எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்!!

 
rain

வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு  உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

rain

நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் (ஈரோடு, கரூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி), சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வருகிற 2 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Rain

அதிகபட்ச வெப்பநிலை: தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். சென்னையை பொறுத்தவரை: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

rain

 இன்று  லட்சத்தீவு கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வருகிற 4ஆம் தேதி தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):


தக்கலை (கன்னியாகுமரி) 4, பூதபாண்டி (கன்னியாகுமரி) 3, இரணியல் (கன்னியாகுமரி), சூரலக்கோடு (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), காங்கேயம் (திருப்பூர்), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) தலா 2, சித்தார் (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி) பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), உதகமண்டலம் (நீலகிரி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), தேவாலா (நீலகிரி), குந்தா பாலம் (நீலகிரி), திருச்செங்கோடு (நாமக்கல்) தலா 1.