மகாத்மாவை கொன்ற கோட்சே தியாகி... இந்தியா எந்த திசையை நோக்கி செல்கிறது?- அப்பாவு
எழுத்தாளர் கண்மணி எழுதிய "அங்காயா வம்சம்", "தூக்கத்தைத் தின்றவர்கள்" என்ற நூல் வெளியிட்டு விழா சென்னை தியாகராயர் நகரில் உள்ள சர்.பிட்டி தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு மற்றும் பலர் கலந்து கொண்டு நூல்களை வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய அப்பாவு, “இந்தியாவில் தோன்றிய நீண்ட காலமாக ஆட்சியில் அதிகாரத்தில் அவர்கள் மட்டும் படித்து பட்டம் பெற்ற வேண்டும், வேறு எந்த சமூகத்தையும் படிக்க விடாமல் குருகுல கல்வி என்று வைத்து அவர்கள் மட்டும் இந்தியாவில் உள்ள 10% பேர் கல்வி கற்று யார் ஆட்சியில் இருந்தாலும் அதிகாரத்திலிருந்து கோலாச்சினார்கள். மிகப்பெரிய சதியை செய்து மகாத்மா காந்தியையே படுகொலை செய்தார்கள் அந்த கோட்சே மிகப்பெரிய தியாகி என்று நாடாளுமன்றத்திலே நம்முடைய மத்திய பிரதேசம் நாடாளுமன்ற உறுப்பினரே நாடாளுமன்றத்தில் பேசுகிறார்கள் என்றால் இந்தியா எந்த திசையை நோக்கி செல்கிறது என்பதை நாம் எண்ணி பார்க்க வேண்டும்.
இதனை பார்க்கும் போது வேதனையாக இருக்கின்றது மன உளைச்சலோடு சொல்லுகிறேன், இந்த நிலை மாற வேண்டும் ஜாதியை பற்றி சொன்னார்கள் அதைவிட தாண்டி மதவெறி, மகாத்மா காந்தியோடு நின்றுவிடும் என்று நினைத்தோம் அது தொடர்வது வேடிக்கையாக இருக்கிறது. எழுத்தாளர்களுக்கு எல்லாம் அடைக்கலமாக பாதுகாப்பாக இருக்கிறது என்றால் தமிழ் நாட்டை தான் சொல்ல வேண்டுமே தவிர மற்ற மாநிலங்களெல்லாம் எழுத்தாளர்கள் படைப்பாளிகளுக்கு எல்லாம் பாதுகாப்பு இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது. எழுத்தாளர்களுக்காக பல நல்லத்திட்டங்களை முதல்வர் செயல்படுத்தியுள்ளார்.
இந்த ஆட்சிதான் எழுத்தாளர்களின் பொற்காலம் என கூற வேண்டும். மேலும், அரசியலமைப்பு சட்டம்தான் நம்மை பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் தற்போது எந்த நிலையில் இருக்கிறது என்பதை நாடாளுமன்றத்தில் நடைபெறும் விவாதங்களில் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம். ஆகவே ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்றவர்கள் இந்தியா ஒரு வல்லரசாக வேண்டும் இந்தியா பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் ஆனால் அது எவ்வாறு வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் எல்லோருக்கும் அரசாக இருக்க வேண்டும். நம்முடைய ஜனநாயகம் சிதைந்து விடுமோ என்ற ஒரு அச்சம் நமக்கெல்லாம் ஏற்படுகின்றது. நம்மை ஒன்றாக சேர்த்து வைத்திருப்பதே இந்த இந்திய அரசியலமைப்பு சட்டம்தான். அந்தச் சட்டத்தை நிலை நாட்ட கூடிய நீதி அரசர்கள் தேவையற்ற வார்த்தையை பயன்படுத்தலாமா என்பதுதான் நமக்கு மிகப்பெரிய கேள்வியாக இருக்கின்றது. இந்திய அளவில் சதி நடந்து கொண்டிருக்கிறது. அதனை அனைவரும் முறியடிக்க வேண்டும்” என பேசினார்.