பேத்தியை பார்க்க ஆசை ஆசையாக சென்ற மூதாட்டி விபத்தில் சிக்கி உயிரிழப்பு

 
விபத்து

சின்னசேலம் அருகே பிறந்த தனது பேத்தியை பார்ப்பதற்காக பேருந்தில் ஏற சென்ற மூதாட்டி மீது அரசு பேருந்து ஏறி இறங்கியதில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மேல்நாரியப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த அம்மணி அம்மாள் என்பவர் ஆத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் பிறந்துள்ள தனது பேத்தியை பார்ப்பதற்காக ஆத்தூருக்கு பேருந்தில் ஏறுவதற்காக சின்னசேலம் அருகேயுள்ள வி.கூட்ரோடு பாலத்தின் கீழே நடந்து சென்று கொண்டிருந்தபோது சேலத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற அரசு பேருந்து திரும்பும் பொழுது அம்மணி அம்மாள் மீது ஏறி இறங்கிய நிலையில் விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்து நிற்காமல் சென்றுள்ளது. 

இந்த நிலையில் அரசு பேருந்து ஏறி இறங்கியதில் அம்மணி அம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் உயிரிழந்த மூதாட்டி அம்மணி அம்பாள் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த விபத்து தொடர்பாக சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் பிறந்த தனது பேத்தியை பார்ப்பதற்காக ஆசை ஆசையாக சென்ற மூதாட்டி விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.