பழனியில் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு கோலாகல தொடக்கம்..!
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு கோலாகல தொடங்கியது. தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் வாழ்த்துரை வழங்குகிறார்.
தமிழக இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்றும் நாளையும் என 2 நாட்கள் நடைபெறுகிறது. மாநாடு பழனியில் உள்ள பழனியாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லூரியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி காலை 9 மணிக்கு தொடங்கி வைத்தார். மாநாட்டில் காணொளி காட்சி மூலம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகிறார். இதில் 300க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள், வெளிநாட்டு அமைச்சர்கள், பிரதிநிதிகள், நீதிபதிகள், ஆதீனங்கள் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.
மேலும் இந்த மாநாட்டில் தமிழ் கடவுள் முருகனின் வழிபாட்டு சிறப்பு, இலக்கிய சிறப்பு குறித்து கருத்துரங்கங்கள் நடைபெருகிறது. அத்துடன் முருகனின் புகழ் குறித்த 1,300 ஆய்வு கட்டுரைகள் அழகன் முருகன், பாதயாத்தரையும் முருகனும், நவபாஷாணத்தில் முருகன், அறுபடை வீடுகளில் அவதரித்த முருகன், தமிழும் முருகனும் உட்பட பல்வேறு தலைப்புகளில் வெளியிடப்படுகின்றன். மாநாட்டு மலர் வெளியிடுதல் நிகழ்ச்சியும், முருகனின் புகழ் தொண்டு ஆற்றிய16 பேருக்கு ஒரு பவுன் தங்கக் காசு மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
மாநாட்டு பந்தலில் அமைக்கப்பட்டுள்ள கலையரங்கத்தில் 100 பேர் அமைந்து பார்வையிடும் வகையில் அறுபடை முருகன் கோவில் காண்பிக்கப்படுவதோடு, முருகனின் 6 நிமிடம் பாடல் காட்சிகள் திரையிடப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து இசை நாட்டியம், நாடகம், பட்டிமன்றம், சொற்பொழிவு போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடிய முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் இலவசமாக உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநாட்டு நுழைவாயிலில் மழை வடிவிலான பிரம்மாண்டமான செட்-ல் சிவன்,பார்வதி, முருகன் விநாயகர், அருணகிரிநாதர், வீரபாகு போன்ற உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன ! முகப்பில் ஆறுபடை வீடு அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டுக்கு வரக்கூடிய பக்தர்கள் அனைவருக்கும் முருகனின் ராஜ அலங்கார படம், திருநீறு, குங்குமம், 200 கிராம் பஞ்சாமிர்தம், கந்த சஷ்டி புத்தகம், லட்டு, முறுக்கு ஆகியவை அடங்கிய பிரசாத பைகள் வழங்கப்பட உள்ளன!
மாநாட்டிற்கு வரக்கூடிய பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் , மருத்துவம், சுகாதாரம், போன்ற அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. வெளிநாட்டு பிரதிநிதிகள் முக்கிய பிரமுகர்கள் வருவதன் காரணமாக மாநாட்டில் திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மாநாடு நடைபெறும் இடங்களை சுற்றி 200 சிசிடி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.