சென்னையில் பதுங்கி இருந்த அல்கொய்தா பயங்கரவாதி கைது

 
சென்னையில் பதுங்கி இருந்த அல்கொய்தா பயங்கரவாதி கைது

சென்னையில் பதுங்கி இருந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அல்கொய்தா போன்ற இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

மேற்குவங்க மாநிலம் கன்க்சா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக ஹபிபுல்லா (வயது 21) என்பவரை கடந்த ஆண்டு அம்மாநில போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த வழக்கில் தொடர்புடைய ஷேக் கணாவர் ( வயது 30) என்பவர் சென்னையில் பதுங்கி இருப்பதாக மேற்குவங்க போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் டிஎஸ்பி பிகஸ் கண்டி டேவ் தலைமையிலான போலீசார் இன்று காலை கோயம்பேடு காவல் நிலையம் வந்து அன்வர் தொடர்பான தகவல்களை தெரிவித்து அவரை பிடிக்க உதவி செய்யுமாறு கேட்டனர்.

இதையடுத்து விருகம்பாக்கம் டாய்சா அதிகாரிகள் குடியிருப்பு பகுதியில் கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் தங்கி அருகில் உள்ள ஒரு ஹோட்டலில் அயனிங் வேலை செய்து வந்த ஷேக் கணாவரை துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்தனர். இவர் அன்சார் அல் இஸ்லாம் என்ற பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராக இருப்பதாகவும், அல்கொய்தா மற்றும் பங்களாதேஷ் நாட்டில் செயல்படும் மத அடிப்படை வாத இயக்கங்களுக்கு ஆதரவாளர் எனவும் தெரியவந்தது. அப்பாவி இளைஞர்களை மூளை செலவு செய்து பயங்கரவாத இயக்கங்களில் சேர்ப்பது, பிரச்சாரம், நிதி திரட்டுவது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இதையடுத்து மேற்குவங்க போலீசார் அவரை  எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி டிரான்சிட் வாரண்ட் பெற்று அழைத்துச் சென்றனர்.