தேசிய கல்விக் கொள்கையை ஏற்கனுமா? ஒன்றிய கல்வி அமைச்சருக்கு, அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்.
தேசிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ள பல்வேறு இலக்குகளை ஏற்கனவே தமிழ்நாடு எட்டியுள்ளது என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு , தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளித்துள்ளார்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் (சமக்ர சிக்சா அபியான்) கீழ், தமிழகத்துக்கு தர வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. பிஎம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்த, மத்திய கல்வி அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யாத மாநிலங்களுக்கு இந்த நிதி விடுவிக்கப்படவில்லை. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், "சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கான நிதியை மறுப்பது, அதே வேளையில் குறிக்கோள்களில் வெற்றியடையாதோருக்குத் தாராளமாக நிதி ஒதுக்குவது, இப்படித்தான் மத்திய பாஜக அரசு தரமான கல்வியையும் சமத்துவத்தையும் ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளதா, முடிவை நாட்டுக்கும், நாட்டு மக்களின் புரிதலுக்குமே விட்டுவிடுகிறேன்" என தெரிவித்துள்ளார்.
Denying funds to the best-performing states for refusing to bow to the #NEP, while generously rewarding those who are not delivering on the objectives – Is this how the Union BJP Government plans to promote quality education and equity?
— M.K.Stalin (@mkstalin) September 9, 2024
I leave it to the wisdom of our nation… pic.twitter.com/6whhTjD3bG
இதற்கு பதிலளித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான உங்களின் திட்டமிட்ட எதிர்ப்பில் சில கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன்.
1. தமிழ் உள்ளிட்ட தாய்மொழியில் கல்வி பயிற்றுவிப்பதை நீங்கள் எதிர்க்கிறீர்களா?
2. தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் தேர்வுகள் நடத்துவதை நீங்கள் எதிர்க்கிறீர்களா?
3. தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பாடத் திட்டத்தையும், பாடப் புத்தகங்களையும் உருவாக்குவதை நீங்கள் எதிர்க்கிறீர்களா?
4.ஒட்டுமொத்த வளர்ச்சியையும், பல்துறை அறிவையும், எதிர்கால தேவையை நிறைவேற்றக் கூடியதாகவும் அமைந்துள்ள புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறீர்களா?
அப்படி இல்லாவிட்டால், உங்களின் அரசியல் லாபத்தை தள்ளிவைத்துவிட்டு தமிழக மாணவர்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்து தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
Healthy competition amongst the states is always welcome in a democracy. However, pitting states against each other to make a point, goes against the spirit of the Constitution and the value of a unified India. NEP 2020 was formulated through wide range of consultations and has… https://t.co/16ntQqPQs8
— Dharmendra Pradhan (@dpradhanbjp) September 9, 2024
இந்நிலையில் ஒன்றிய அமைச்சரின் கேள்விக்கு தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலளித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “1930கள் மற்றும் 60களின் வரலாற்று இயக்கங்களில் வேரூன்றிய இருமொழிக் கொள்கையின் மூலம் தமிழ்நாடு தனது மொழியியல் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் எப்போதும் உறுதியாக உள்ளது. தமிழை எங்களது அடையாளத்தின் தூணாக ஏற்றுக்கொள்கிறோம் அதே வேளையில் வருங்கால சந்ததியினர் ஆங்கிலப் புலமை பெற்றிருக்கவேண்டும் என்பதையும் உறுதிபடுத்துகிறோம்.
கேள்வி 1-க்கான பதில்: எங்களின் கொள்கையானது எப்பொழுதும் தமிழை அடிப்படையாக கொண்டு, உள்ளடக்கிய கற்றலுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது, அதே நேரத்தில் மாணவர்களுக்கு ஆங்கில அறிவை மேம்படுத்துகிறது.
கேள்வி 2-க்கான பதில்: எங்களது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே ஆட்சேர்ப்பில் சம நிலை மற்றும் உள்ளூர் மொழி தெரிந்திருப்பதை உறுதி செய்வதற்காக தமிழில் போட்டித் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளது.
கேள்வி 3-க்கான பதில்: பொறியியல், மருத்துவம் போன்ற தொழில்நுட்பப் பாடங்களைக்கூட மொழிபெயர்த்து, தமிழில் கல்விப் பொருட்களை வெளியிடுவதில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.
கேள்வி 4-க்கான பதில்: தமிழகத்தின் கொள்கைகள் ஏற்கனவே முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண், நான் முதல்வன், இல்லம் தேடி கல்வி, தமிழ்ப் புதல்வன் மற்றும் என்னும் எழுத்து போன்ற திட்டங்களின் மூலம் முழுமையான மற்றும் உள்ளடக்கிய கொள்கைகளை பிரதிபலிக்கின்றன.
இறுதியாக, தமிழ்நாடு ஏற்கனவே தனது சொந்த முயற்சிகள் மூலம் தேசிய கல்விக் கொள்கையின்( NEP)ஏற்றுக்கொள்ளக்கூடிய பல அம்சங்களை செயல்படுத்தி வருகிறது. இருப்பினும், மும்மொழிக் கொள்கை மற்றும் பாடத்திட்ட மாற்றங்கள் போன்றவற்றில் எங்களுக்கு ஆட்சேபனைகள் உள்ளன. 'சமக்ரா சிக்ஷா' நிதி ஒதுக்கீட்டை, தேசிய கல்விக் கொள்கையுடன் இணைப்பது கல்வியில் மாநிலத்தின் அரசியலமைப்பு சுயாட்சியை மீறுகிறது.
எனவே, எஸ்எஸ் திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள நிதியை NEP-உடன் இணைக்கப்பட்ட நிபந்தனைகள் இல்லாமல் விடுவிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
With due respect, for the kind attention of Hon'ble Minister @dpradhanbjp:
— Anbil Mahesh (@Anbil_Mahesh) September 10, 2024
Tamil Nadu has always been committed to preserving its linguistic heritage through the two-language policy, rooted in historical movements of the 1930s and 60s. We embrace Tamil as a pillar of our… https://t.co/SeRx108Mfo