பெண் ஐபிஎஸ் வந்திதா பாண்டேவுக்கு மிரட்டல்! வேடிக்கை பார்க்கும் அரசு- விஜயபாஸ்கர்
மகளிர் நலன் போற்றிய இம்மண்ணில் அதிகாரமிக்க பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளரையே மிரட்டுவதும், இழிவுபடுத்துவதும் இனியெங்கும் நிகழாத வண்ணம் அடியோடு நிறுத்த வேண்டியது அரசின் கடமை என அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், “புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே குறித்தும், அவருடைய குடும்பத்தினர் குறித்தும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட அருவருக்கத்தக்க வகையிலான பதிவுகள் இணைய சுதந்திரத்தையே இழிவு நிலையாக்கி இருக்கிறது. மகளிர் நலன், மகளிர் உரிமை என வெறும் வார்த்தைகளில் மட்டும் மகளிரைப் போற்றிவிட்டு, அவர்கள் மீது அள்ளி வீசும் அவதூறுகளை விடியா அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருக்கக் கூடாது.
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் @IpsVandita அவர்கள் குறித்தும், அவருடைய குடும்பத்தினர் குறித்தும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட அருவருக்கத்தக்க வகையிலான பதிவுகள் இணைய சுதந்திரத்தையே
— Dr C Vijayabaskar - Say No To Drugs & DMK (@Vijayabaskarofl) August 23, 2024
இழிவு நிலையாக்கி இருக்கிறது.
மகளிர் நலன்; மகளிர் உரிமை என வெறும் வார்த்தைகளில் மட்டும்…
மகளிர் எல்லா நிலைகளிலும் முன்னேற வேண்டும். சமூகத்தில் தனித்த அடையாளத்தோடு விளங்க வேண்டுமென்று நாட்டிலேயே முதல்முறையாக காவல்துறையில் முழுவதும் பெண்களைக் கொண்ட அனைத்து மகளிர் காவல் நிலையம் கொண்டு வந்தது. மகளிர் அதிரடிப்படை, கமாண்டோ படை உருவாக்கியது; முதல் பெண் சட்ட ஒழுங்கு டி.ஜி.பி நியமித்தது என பெண்களை உயர் பதவிகளில் நியமித்து அழகு பார்த்தவர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். மகளிர் நலன் போற்றிய இம்மண்ணில் அதிகாரமிக்க பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளரையே மிரட்டுவதும், இழிவுபடுத்துவதும் இனியெங்கும் நிகழாத வண்ணம் அடியோடு நிறுத்த வேண்டியது அரசின் கடமை. பொறுப்பு என்பதை இனியாவது உணருங்கள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.