அதிமுகவை Prank செய்த மக்கள்.. போட்டு உடைத்த ராஜேந்திர பாலாஜி
வலுவான கூட்டணி அமைத்து 2026-ல் அதிமுக ஆட்சி அமைக்கும் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
சிவகாசி சட்டமன்றத் தொகுதி அதிமுக சார்பில் அண்ணா பிறந்த தின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “தமிழகத்தில் இன்றைய தினம் அனைத்து பொருட்களின் விலைகளும் கூடுதலாகி, மின் கட்டணம் உள்ளிட்ட அனைத்து வரியினங்களும் உயர்ந்துள்ளது. ஆனால் வருமானம் அப்படியேதான் உள்ளது. செலவினங்கள் தான் கூடிப்போயுள்ளது. பட்டாசு தொழிலில் உழைத்து சம்பாதித்த பணத்தை, வருமானத்தை மீறிய செலவு இருப்பதால் நல்ல முறையில் முதலீடு செய்ய முடியவில்லை. அதிமுக ஆட்சியின் போதெல்லாம் மக்களுக்காக எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு தமிழகம் உயர்வுக்கு காரணமாய் இருந்தது.
கடந்த தேர்தலில் வாக்களித்தவர்கள் உங்களுக்குத்தான் எங்கள் ஓட்டு என்று கூறிவிட்டு தங்களது ஓட்டுக்களை மாற்றிப் போட்டு விட்டனர். எங்களை மக்கள் Prank செய்துவிட்டனர். 2026 சட்டமன்றத் தேர்தலில் வலிமை கொண்ட துணிவுள்ள கட்சியாக அதிமுக உருவெடுத்து ஜெயிக்கும். தற்போது ஆட்சி எல்லாம் காட்சியாகிவிட்டது. விளம்பரத்தால் உயர்ந்தது என்றும் நிரந்தரம் அல்ல. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக ஜெயிப்பதற்கு வாய்ப்பே இல்லை. பாராளுமன்ற தேர்தலில் ஜெயித்தவர்கள் பணம் கேட்டு பெட்டிஷன் கொடுக்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடி யிடம் அதிமுக போல சண்டை போட்டு பிரச்சினை செய்ய வேண்டாமா? பொய் என்றுமே ஜெயிக்காது.
அதிமுக விருச்சிகமாக வளர்ந்து உயர்வு பெறும். தற்போதுள்ள சூழ்நிலை மாறி வலுவான கூட்டணி இயக்கமாக அமைத்து எடப்பாடியார் தலைமையில் அதிமுக ஆட்சி அமைப்போம். தீப்பெட்டி-பட்டாசு தொழில் உள்பட அனைத்து தொழிலிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.சமதர்ம சமுதாய அமைப்பு கொண்ட ஆட்சியை அதிமுக எடப்பாடி தலைமையில் அமைக்கும். நமக்கு சோர்வு என்பது தேவையில்லை. முழிப்போடு, விழிப்போடு, வீரத்தோடு இருங்கள். உங்களை ஊக்குவிப்பது எங்கள் பொறுப்பு. எங்களை வெற்றி பெறச் செய்வது உங்கள் பொறுப்பு. தமிழகத்தில் நல்லாட்சியை நாங்கள் கொடுப்போம்” என்றார்.