விஜயின் அரசியல் வருகையால் திமுக ஓட்டுதான் உடையுமே தவிர அதிமுகவுக்கு பாதிப்பு வராது- ராஜேந்திர பாலாஜி
அமலாக்கத்துறை சோதனை துரைமுருகனுக்கு மன அழுத்தத்தை கொடுக்கும் வகையில் இருந்தால் அது வருந்தத்தக்கது என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் அருகே குமாரலிங்காபுரத்தில் அதிமுகவின் 53-வது ஆண்டு துவக்க விழாவினை முன்னிட்டு அக்கட்சியின் கொடியை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கொடியேற்றி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே. டி ராஜேந்திர பாலாஜி, “திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை சட்டபூர்வமான நடவடிக்கை என்றால் ஏற்றுக்கொள்வார்கள். அரசியல் ரீதியான பழிவாங்கும் நடவடிக்கையாக இருந்தால் திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் துரைமுருகனுக்கு மன அழுத்தத்தை கொடுக்கும் வகையில் இருந்தால் அது வருந்தத்தக்கது. திமுக கூட்டணி சிதறு தேங்காய் போல் உடையும் சூழல் உருவாகியுள்ளது. இனிமேல் திமுக கூட்டணியை தாங்கி பிடிக்கவும் முடியாது. சிபிஎம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தமிழகத்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டதாக பேசியுள்ளது. திமுக ஆட்சியை ஆதரிப்பவர்களும் எதிர்க்கின்றனர். எதிர்க்கட்சிகளும் பொது மக்களும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. திமுக ஆட்சி தேவையா என மக்கள் நினைக்கின்றனர்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்களுக்கும் போராட்டம் நடத்த அனுமதி அளித்தவர். அதிமுக ஆட்சியில் இருந்த பக்குவம் திமுக ஆட்சியில் கிடையாது. பட்டாசு வெடி விபத்துக்கு ஆளும் திமுக அரசு தான் காரணம். பட்டாசு தொழிலாளர்களுக்கும் ஆலை உரிமையாளர்களும் அச்சத்துடனையே தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தொடர் ரைடு சோதனையால் தொழிலாளர்கள் உரிமையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதிகாரிகளின் தொடர் சோதனை நடவடிக்கையால் தொழிலாளர்கள் அச்சத்துடன் பதறி பதறி வேலை செய்யும் போது வெடி விபத்து ஏற்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு வெடிவிபத்து தொடர்ச்சியாக நடைபெறுவதற்கு ஆளும் திமுக அரசு தான் காரணம். பட்டாசு தொழிலை நசுக்குகிற பணியில் மறைமுகமாக திமுக ஈடுபட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் இது போன்ற பட்டாசு வெடி விபத்துக்கள் நடைபெறவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக பட்டாசு வெடி விபத்து நிகழும். ஆனால் திமுக ஆட்சியில் தொடர்ந்து பட்டாசு வெடி விபத்துக்கள் நடந்து வருகிறது. பட்டாசு தொழில் தொழிலாளர்கள், நூல் கிடைக்காததால் நெசவாளர்களும், விதை நெல் கிடைக்காததால் விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். திமுக ஆட்சியில் எல்லா மக்களும் பாதிக்கப்படுகின்றனர். இந்த ஆட்சி தொடர வேண்டுமா என்ற மனநிலை மக்கள் மனதில் உருவாகியுள்ளது. இபிஎஸ் தலைமை வேண்டுமென்ற நிலைமை தற்போது உருவாகியுள்ளது. 234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் அதிமுக கைப்பற்றும். 200-க்கு 200 தொகுதி வெற்றி என திமுகவுக்கு வாய்ப்பே இல்லை. அதற்கான வாய்ப்பை தெரியவில்லை. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யின் வருகையால் திமுகவின் ஓட்டுக்கள் உடையுமே தவிர அதிமுகவிற்கு சிறிதளவு கூட பாதிப்பு வராது” என தெரிவித்தார்.