ஓட்டுக்கு பணம் கொடுக்க தயாராக உள்ளோம்- ராஜேந்திர பாலாஜி
தேர்தலுக்காக வாக்குக்கு பணம் கொடுப்பது என்பது ஒரு பிரச்சனை அல்ல, பணம் கொடுப்பதற்கு தயாராக உள்ளோம், தேவை அறிந்து வேலையை செய்வோம் சரியான நேரத்தில் சரியான வேலையை செய்து வெற்றி பெறுவோம் என முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் அதிமுக சார்பில் கட்சி நிர்வாகிகளிடையே நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ராஜேந்திர பாலாஜி, “வரும் தேர்தலில் அதிமுக வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்கு தயாராக உள்ளோம். தேர்தல் ஆணையம் எந்த தொகையை நிர்ணயிக்கிறதோ? அந்த தொகையை அளிப்பதற்கு தயார். ஓட்டுக்கு ரூபாய் என்பது ஒரு பிரச்சனை அல்ல, தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். மக்களின் தேவை அறிந்து வேலை செய்ய வேண்டும். அதை பப்ளிக்காக சொல்ல முடியாது. தேர்தல் நேரத்தில் சரியானவற்றை நிச்சயமாக செய்வோம்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தோற்றதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், டெல்லி பிரச்சனை ஒரு காரணமாக இருந்தது. ஆதலால் , வரும் தேர்தல் நேரத்தில் சரியானவற்றை சரியான வேலைகளை செய்து வெற்றி பெற செய்வோம்” என்றார்.