அதிமுக ஓட்டுகள் விஜய்க்கு சென்றுவிடும்- புகழேந்தி

 
pugalendhi

அதிமுக ஓட்டுகள் நடிகர் விஜய்க்கு செல்ல உள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் வா.புகழேந்தி தெரிவித்துள்ளார். 

pugalendhi

மருது சகோதரர்களின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக கோவை ராமநாதபுரம் பகுதியில் தமிழ்நாடு நேதாஜி இளைஞர் இயக்கம் சார்பில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் புகழேந்தி கலந்துகொண்டு மருது சகோதரர்கள், வேலு நாச்சியார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த புகழேந்தி, “கோவை மாவட்டத்தில் ஒரே இடத்தில் சுபாஷ் சந்திர போஸ், பசும்பொன் முத்துராமலிங்க தேவர், வேலுநாச்சியார் மூவருக்கும் சிலை நிறுவப்பட வேண்டும், அந்த சிலையை நானே தருகிறேன். அதுமட்டுமின்றி மருது சகோதரர்களுக்கும் தனி இடத்தில் தனி சிலை அமைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அதிமுகவை ஒருங்கிணைப்பது கஷ்டமாக உள்ளது. அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய்க்கு பாராட்டுகள், அவர் எக்காலத்திலும் பின்வாங்கி விடக்கூடாது. விஜய் மாறுதலுக்காக வருகிறார். அந்த மாறுதல் உங்களால் வரட்டும். விஜயகாந்த் இருந்திருந்தால் அந்த மாறுதல் வேறு மாதிரி இருந்திருக்கும், நடிகர் ரஜினி இன்னும் அரசியலுக்கு வரவில்லை, கமல் வேறு விதமாக அரசியல் செய்து வருகிறார். 

Pugalendhi

நடிகர் விஜய்யினால் எடப்பாடி பழனிசாமிக்கு தான் பாதிப்பு வரும். அதிமுக ஓட்டு விஜய்க்கு சென்று விடும். புதிய வரவுகளால் அதிமுகவிற்கு தான் பெரிய பாதிப்பு ஏற்படும. மேலும் சசிகலா, ஓபிஎஸ் என அனைவரும் களத்தில் இறங்கி ஒன்றாக செயல்பட வேண்டும். அதிமுக தொண்டர்களும் ஒருங்கிணைந்து செல்ல வேண்டும். பொதுமக்கள் அனைவரும் அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும், எம்ஜிஆர் ஆட்சி வேண்டும் என்று தான் கூறுகின்றனர். பாஜகவை பார்த்து ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருக்கும் பயம், நடிகர் விஜய்க்கு வாழ்த்து கூறினாலும், நான் இந்த கட்சியில் இருந்து பிரிந்து வரமாட்டேன். விஜயின் கோட்பாடுகள் பெரியாரின் கோட்பாடுகளாக இருக்க வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னையில் தண்ணீர் தேங்காது என்று கூறியது எடப்பாடி பழனிசாமி தான். ஆனால் தற்பொழுது திமுகவை கை காண்பிக்கிறார். மேலும் முதல்வர் ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனங்களுக்கு பதில் அளிக்க தேவையில்லை” எனக் கூறினார்.