ஓசூர்: ஆற்றில் குவியல் குவியலாக நுரை பொங்கி தூர்நாற்றம்! நடவடிக்கை எடுக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்

 
ops

நச்சுத் தன்மை உடைய நுரை தென்பெண்ணை ஆற்றில் ஏற்படுவதை தடுத்து நிறுத்துக என தி.மு.க. அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தென்பெண்ணை ஆற்று நீரில் குவியல், குவியலாக ரசாயன நுரை | Heaps in the water  of the Thenpennai river, heaps of chemical foam

இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மனிதனின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு சுற்றுச்சூழலுடன் மிகவும் தொடர்புடையதாக உள்ளதால், காற்றிலும், நீரிலும் மாசுக்கள் கலக்காதவாறு காக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் மாநில அரசுக்கு உண்டு. ஆனால், இதற்கு முற்றிலும் முரணான சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது. கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து வருவதன் காரணமாக, அங்கிருந்து தென் பெண்ணை ஆற்றில் 4,000 கன அடிக்கு மேல் நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நீரினை நம்பி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாயம் மேற்கொள்கின்றனர்.

இந்த நிலையில், கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையில் இருந்து 4,000 கன அடிக்குமேல் தென் பெண்ணை ஆற்றில் நீர் திறக்கப்பட்டதையடுத்து, ஒசூர் நந்திமங்கலம் சாலையில் உள்ள தரைப்பாலத்தில் 15 அடி உயரத்தில் ரசாயன நுரைகள் தேங்கி நின்றதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும், ரசாயனக் கழிவுகள் நீரில் கலக்கப்பட்டதன் காரணமாக ஆற்றில் குவியல் குவியலாக நுரை பொங்கி தூர்நாற்றம் வீசுவதாகவும், இதன் காரணமாக, தட்டனப்பள்ளி, சித்தனப்பள்ளி, தேவிசெட்டிப்பள்ளி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் 15 கிலோ மீட்டர் தூரம் சுற்றி ஒசூருக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

தென்பெண்ணை ஆற்றில் நச்சு நுரை: தடுத்து நிறுத்த நடவடிக்கை தேவை -  ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்|Toxic foam in Tenpenna River: Action needed  to stop - O. Panneerselvam insists


ரசாயனம் கலந்த நீர் விவசாய நிலங்களுக்குள் புகுந்துள்ளதால், அங்கு பயிரிடப்பட்டுள்ள பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அங்குள்ள நீரைப் பருகுவதே அபாயம் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதற்குக் காரணம், கர்நாடக மாநிலத்தின் நீர்பிடிப்பு பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகளின் ரசாயனக் கழிவுகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள கழிவுகள்தான் என்று கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், கெலவரப்பள்ளி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டால், தரைப்பாலம் மூழ்குவது என்பது வாடிக்கையாகிவிட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஒசூர் - நந்திமங்கலம் சாலையில் உள்ள தரைப்பாலத்திற்கு பதிலாக உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டுமென்றும், கர்நாடக மாநிலத்தின் நீர்பிடிப்பு பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகளின் ரசாயனக் கழிவுகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள கழிவுகள்தான் நச்சுத் தன்மையுடன் கூடிய நுரைகள் வருவதற்கு காரணம் என்பதால் அதனைத் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்தப் பிரச்சனையில் உடனடியாகத் தலையிட்டு, ஒசூர் நந்திமங்கலம் சாலையில் மேம்பாலம் கட்டவும், கர்நாடக அரசுடன் பேசி, தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் ரசாயனக் கழிவு நீர் மற்றும் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் ஆகியவை ஆற்றில் கலக்காமல் இருப்பதற்கான நடவடிக்கையினை எடுக்கவும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.