விஜயுடன் இருப்பவர்கள் எல்லாம் ரசிகர்களே தவிர தொண்டர்கள் இல்லை- கே.பி.முனுசாமி
நடிகர் விஜய் அரசியலில் நீண்ட நெடிய பயணம் செய்ய வேண்டும், அப்பொழுதுதான் அவர் அரசியல் ரீதியான தலைவராக அங்கீகரிக்க முடியும் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை தெற்கு, கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் கள ஆய்வுக்குழு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.முன்னாள் அமைச்சர்கள் அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கழகத் துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி, கழக மகளிர் அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, “முதல்வர் ஸ்டாலின் அரசு பணத்தை எடுத்து தந்தைக்கு விழா எடுத்து தேவையில்லாத இடங்களில் கட்டிடங்களை கட்டி அவரது தந்தையின் சிலையை வைத்து அரசு பணத்தை விரயம் செய்து வருவதாக சுட்டிக்காட்டினார். கடந்த நான்காண்டு கால ஆட்சியில் உருப்படியாக ஒரு மருத்துவ கல்லூரி கூட கட்டவில்லை. எடப்பாடி பழனிசாமி ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும் என்று கூறினாரே, தவிர பாஜகவுடன் கூட்டணி அமைப்போம் என்று கூறவில்லை. இதனை முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சிறுபான்மையர் வாக்குகளை பெற்று விடலாம் என முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் எந்த காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை.
நடிகர் விஜய் தற்போது தான் கட்சி தொடங்கியுள்ளார். அவர் ரசிகர்கள் தொண்டர்களாக மாற வேண்டும். மக்களோடு சென்று மக்களாக பணியாற்ற வேண்டும். இன்னும் நீண்ட தூரம் அவர் அரசியலில் பயணிக்க வேண்டும். அப்போதுதான் அரசியல் ரீதியான தலைவர் என்று அங்கீகாரத்தை அவர் பெற முடியும். தற்போது கட்சி தொடங்கியுள்ளதை வாழ்த்துவோம். தேர்தல் நேரத்தில் அதிமுக 2 கோடி தொண்டர்களை நம்பி தேர்தலில் போட்டியிடும். தேர்தல் நெருங்க நெருங்க உணர்வோடு உள்ளவர்கள் வருவார்கள். நடிகர் விஜய் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என தெரிவித்துள்ளது அரசியல் கட்சியினரையும் மக்களின் திசை திருப்புவதற்காகவே” என்றார்.