SIR-ஐ அதிமுக முழு மனதுடன் வரவேற்கிறது: ஜெயக்குமார்

 
SIR-ஐ அதிமுக முழு மனதுடன் வரவேற்கிறது: ஜெயக்குமார் SIR-ஐ அதிமுக முழு மனதுடன் வரவேற்கிறது: ஜெயக்குமார்

S.I.R. எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை அதிமுக சார்பில் முழு மனதுடன் வரவேற்கிறோம். தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர திருத்தத்தை முறையாக, வெளிப்படையாக செய்ய வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை அதிமுக சார்பில் முழு மனதுடன் வரவேற்கிறோம். திருத்தப் பணிகளை மாநில அரசின் கீழுள்ள அலுவலர்கள்தான் செய்யபோகிறார்கள் என்பதால் அவர்கள் நடுநிலையோடு செயல்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். தேர்தல் ஆணையம் இதை முறையாகவும், வெளிப்படையாகவும் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

இந்தியா முழுவதும் உள்ள வாக்காளர் பட்டியல் சரியானதா என்று சரிபார்க்க வேண்டும். குறிப்பாக தமிழகத்தில் 2026ல் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள வாக்காளர் பட்டியல் 100 சதவீதம் முழுமையானதாகவும், சரியானதாகவும் இருக்கிறதா என்று பார்த்தால் இல்லை என்றே சொல்ல வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக எந்தவிதமான நலத் திட்டங்களையும் மேற்கொள்ளாத திமுக அரசு, 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் படுதோல்வியை சந்திப்பது உறுதி. அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பணிகளை ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைக்கிறது திமுக அரசு. நாட்டிலேயே கடன் வாங்குவதில் முதன்மை மாநிலம், வாங்கும் கடனையெல்லாம் வருவாய் செலவினங்களுக்கே செலவிடுகிறது விளம்பர திமுக ஆட்சி” எனக் குறிப்பிட்டுள்ளார்.