பாதுகாக்கப்பட்ட மண்டலம்- அதிமுக கடிதம் கொடுக்கவே இல்லை எனக்கூறும் மத்திய அரசு! மறுக்கும் ஜெயக்குமார்
காவிரி டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவிக்க எந்த முன்மொழிவும் வரவில்லை என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கூறியிருப்பது குறித்து தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ”டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரி அதிமுக ஆட்சியில் கடிதம் வரவில்லை என்று மத்திய அரசு தவறான உண்மைக்குப் புறமான தகவல் கொடுத்துள்ளது. வேளாண் மண்டலம் சட்டப்பேரவையில் அறிவித்து 2021 அரசிதழில் வெளியிடப்பட்டது.
டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் திமுகவின் முயற்சியை தடுத்து நிறுத்தினோம். தமிழக விவசாயிகளை வஞ்சித்தது திமுக அரசுதான். மீத்தேன் திட்டத்தை டெல்டா விவசாயிகள் ஒப்புக்கொள்ளவில்லை. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாதுகாக்கப்பட்ட மண்டலமாக மாற்றும் கடிதத்தை மத்திய அமைச்சராக இருந்த பிரகாஷ் ஜவடேகரிடம் 2020இல் கொடுத்தோம். டெல்டாவில் மீத்தேன் எடுப்பதை பெருமையாக கருதுவதாக 2010ல் டி.ஆர்.பாலு பேசினார். டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் திட்டத்திற்கு துணைபோனது அமைச்சராக இருந்த ஸ்டாலின்” என்றார்.