"அந்த பாவத்தை செய்தது நான்தான்"- ஆர்.பி.உதயகுமார்
கட்சிக்கு துரோகம் செய்தவர்களால் கரை வேஷ்டி கட்ட கூடாது என்ற தண்டனை கிடைத்துள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தலைவாசல் மேற்கு ஒன்றிய அதிமுக கழக செயல் வீரர்கள் கூட்டம் தலைவாசலில் இன்று நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முன்னாள் வருவாய்த்துறை அமைச்சரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆன ஆர்.பி .உதயகுமார் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய ஆர்.பி. உதயகுமார், “அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தலின்படி கிளைக் கழக செயலாளர்களின் செயல் வீரர்கள் கூட்டம் தமிழக முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரு கட்சிக்கு ஆணிவேர் கழகத்தின் கிளை கழக செயலாளர்கள் தான். நம்மை காக்கும் கடவுளாக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார், அவரை காக்கும் காவல் தெய்வங்களாக கிளை கழக செயலாளர் இருக்க வேண்டும், 2021 ஆம் ஆண்டு நாம் தோற்றத்திற்கு கட்சியில் சில துரோகிகள் செய்த நிகழ்ச்சியால் தோல்வி அடைந்தோம். ஆனால் இன்றைக்கு அவர்களால் கட்சி கரை வேஷ்டியை கட்ட முடியாத அளவிற்கு தண்டனை கிடைத்துள்ளது என்றால் அது எம்ஜிஆர் ஜெயலலிதா ஆன்மா கொடுத்த தண்டனை. இதைவிட பெரிய தண்டனை அவர்களுக்கு கொடுக்க முடியாது. கலைஞர் கருணாநிதி நினைவிடம் அமைக்கும் கோப்பில் கையெழுத்திட்ட பாவத்தை செய்தது நான் தான்.
எடப்பாடியார் ஆட்சி காலத்தில் இரண்டு கோடியே பதினெட்டு லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசாக 2500 ரூபாய் பணத்துடன் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டிற்கு 11 மருத்துவக் கல்லூரியில் கொண்டுவரப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தொழில் முதலீட்டுக்காக அமெரிக்க சென்ற போது அங்கு செயல்படும் பால் பண்ணையை பார்த்துவிட்டு அதே போன்று தமிழகத்தில் 1200 கோடி ரூபாய் செலவில் உலக தரம் வாய்ந்த கால்நடை பூங்கா அமைத்துக் கொடுத்தார். ஆனால் இன்றைக்கு அந்த கால்நடை பூங்காவை செயல்படுத்த திமுக அரசு தயக்கம் காட்டுகிறது. தொழில் முதலீட்டுக்காக அமெரிக்கா செல்வதாக கூறி சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு சைக்கிள் ஓட்டி பாட்டு பாடி கொண்டு இருக்கிறார்
இதேபோன்று சென்ற முறை வெளிநாடு முதலீடுக்காக சென்ற முதல்வர் எத்தனை முதலீடுகளை இங்கு கொண்டு வந்துள்ளார் என வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென எடப்பாடி பழனிசாமி கேட்டால் முதல்வர் கோபம் கொள்கிறார். அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதா கொண்டு வந்து அதனை ஆளுநருக்கு அனுப்பி வைத்தால் ஆளுநர் கையெழுத்திடாமல் ஆய்வு செய்து கொண்டிருப்பதாக தெரிவித்த போது எடப்பாடி பழனிசாமி அதனை சட்டம் ஆக்கி அமல்படுத்தினார். ஒரு ஸ்டாலின் அல்ல எத்தனை ஸ்டாலின் வந்தாலும் அதிமுக கிளை கழகச் செயலாளர்கள் வீழ்த்துவார்கள்” என்றார்.