உதயநிதிக்கு 46 வயதுதான்; ஆனால் நான் 50 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன்- எடப்பாடி பழனிசாமி
விஜய் மாநாடு வெற்றி பெற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “ஆட்சிக்கு யார் வர வேண்டும் என்பது மக்கள் கையில் தான் உள்ளது. சக்கரம் சுற்றிக்கொண்டே இருக்கும், மேலே இருக்கும் சக்கரம் கீழே வரும், கீழே இருக்கும் சக்கரம் மேலே வரும். இந்த ஆட்சி நிரந்தரமான ஆட்சியல்ல. அதிமுகவின் வலிமையை குறைத்து மதிப்பிடுகிறார்கள். எனது வெற்றிக்காக பாடுபட்டவர்களை கண்ணை இமைக்காப்பது போன்று காப்பேன். விஜய் ஒரு முன்னணி நடிகர், அவரிடம் ரசிகர் பட்டாளம் உள்ளது. பொது சேவை செய்ய வேண்டுமென கட்சி தொடங்கி உள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள். தமிழக வெற்றிக் கழகத்திற்கு மட்டுமல்ல எந்த கட்சிக்கும் மாநாடு நடத்த திராவிட மாடல் ஆட்சி அனுமதி கொடுப்பதில்லை. அதிமுகவின் வலிமையை சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு குறைத்து மதிப்பிடுகின்றனர்.
முதலமைச்சர் ஸ்டாலினும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் அடிக்கடி சேலம் வருகிறார்கள். எத்தனை முறை வந்தாலும் சேலம் அதிமுகவின் கோட்டைதான். தி.மு.க. கூட்டணிக்குள் புகைச்சல் ஆரம்பித்து விட்டது. திமுகவுக்கு தனித்த பலம் இல்லை. கூட்டணி கட்சிகளை நம்பியே திமுக இருக்கிறது. கூட்டணி கட்சிகள் கைவிட்டால் திமுக வீழ்ந்துவிடும். உதயநிதிக்கு 46 வயதுதான் ஆகிறது. நான் 50 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். அனுபவத்தால், உழைப்பால் எனக்கு பதவி கிடைத்தது. சேலம் ஆத்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கே.பி.முனுசாமி பேசும்போது கனமழையிலும் அதிமுகவினர் ஒருவர் கூட விலகிச்செல்லாமல் கருத்துக்களை கேட்டார்கள்” என்றார்.