தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் பதவியில் இருந்து நடிகை குஷ்பு திடீர் ராஜினாமா
தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் பதவியை நடிகை குஷ்பு ராஜினாமா செய்தார்.
பிரபல நடிகை குஷ்பூ தமிழ், தெலுங்கு ,மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துவருகிறார். இவர் திமுகவில் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வந்தார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றி வந்தார். அதன் பின்னர் பாஜகவில் இணைந்த குஷ்பூ, கடந்த சட்டமன்றத் தேர்தலில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன் பின்னரும் கட்சியில் தீவிர பணியாற்றி வரும் அவருக்கு பாஜகவில் தேசிய செயற்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. பின்னர் 2023 பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் பதவியை நடிகை குஷ்பு ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை ஏற்றதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுதுறை அமைச்சரகம் கடிதம் அனுப்பியுள்ளது. பெண்கள் உரிமைக்காக தொடர்ந்து போராடி வருகிறேன், அவர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன், இன்னும் பெண்களின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன், போராடுவேன் என கூக்குரலிட்ட குஷ்பு திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.